12:1
சகோதர சகோதரிகளே, தூய ஆவியார் அருளும் கொடைகளைக் குறித்துப் பார்ப்போம். அவற்றைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.
12:2
நீங்கள் பிற இனத்தவராயிருந்தபோது ஊமைச் சிலைகள்பால் ஈர்க்கப்பட்டுத் தவறாக வழிநடத்தப்பட்டீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
12:3
கடவுளின் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுப் பேசும் எவரும் “இயேசு சபிக்கப்பட்டவர்” எனச் சொல்ல மாட்டார். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவரன்றி வேறு எவரும் “இயேசுவே ஆண்டவர்” எனச் சொல்ல முடியாது. இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
12:4
அருள்கொடைகள் பலவகையுண்டு; ஆனால், தூய ஆவியார் ஒருவரே.
12:5
திருத் தொண்டுகளும் பலவகையுண்டு; ஆனால், ஆண்டவர் ஒருவரே.
12:6
செயல்பாடுகள் பலவகையுண்டு; ஆனால், கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர்.
12:7
பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது.
12:8
தூய ஆவியார் ஒருவருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தை அருளுகிறார். இன்னொருவருக்கோ அதே ஆவியார் அறிவுசெறிந்த சொல்வளத்தை அளிக்கிறார்.
12:9
அதே ஆவியார் வேறொருவருக்கு நம்பிக்கை அருளுகிறார். அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணிதீர்க்கும் அருள் கொடையையும் அளிக்கிறார்.
12:10
தூயஆவியார் ஒருவருக்கு வல்ல செயல் செய்யும் ஆற்றலையும் இன்னொருவருக்கு இறைவாக்குரைக்கும் ஆற்றலையும் வேறொருவருக்கு ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றலையும் மற்றொருவருக்குப் பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றலையும் பிறிதொருவருக்கு அப்பேச்சை விளக்கும் ஆற்றலையும் அருளுகிறார்.
12:11
அந்த ஒரே ஆவியாரே இவற்றையெல்லாம் செயல்படுத்துகிறார்; அவரே தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் இவற்றைப் பகிர்ந்தளிக்கிறார்.