Trinity

11th Sunday after Trinity

Text cycle 1

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Job 5:8-16

5:8 ஆனால், நான் கடவுளையே நாடுவேன்; அவரிடம் மட்டுமே என் வாழ்க்கை ஒப்புவிப்பேன்.

5:9 ஆராய முடியாப் பெரியனவற்றையும் எண்ணிலடங்கா வியக்கத் தக்கனவற்றையும் செய்பவர் அவரே.

5:10 மண் முகத்தே மழையைப் பொழிபவரும் வயல் முகத்தே நீரைத் தருபவரும் அவரே.

5:11 அவர் தாழ்ந்தோரை மேலிடத்தில் அமர்த்துகின்றார்; அழுவோரைக் காத்து உயர்த்துகின்றார்.

5:12 வஞ்சகரின் திட்டங்களைத் தகர்க்கின்றார்; அவர்களின் கைளோ ஒன்றையும் சாதிக்கமாட்டா.

5:13 ஞானிகளை அவர்தம் சூழ்ச்சியில் சிக்க வைக்கின்றார்; வஞ்சகரின் திட்டங்கள் வீழ்த்தப்படுகின்றன;

5:14 அவர்கள் பகலில் இருளைக் காண்கின்றனர்; நண்பகலிலும் இரவில்போல் தடுமாறுகின்றனர்.

5:15 அவர் வறியவரை அவர்களின் வாயெனும் வாளினின்று காக்கின்றார்; எளியவரை வலியவரின் கையினின்று மீட்கின்றார்.

5:16 எனவே, நலிந்தவர்க்கு நம்பிக்கை உண்டு; அநீதி தன் வாயைப் பொத்திக்கொள்ளும்.

Epistle

1 Corinthians 15:1-10

15:1 சகோதர சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக் கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள்.

15:2 நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே.

15:3 நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே; மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து,

15:4 அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்.

15:5 பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார்.

15:6 பின்பு, ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்து விட்டனர்.

15:7 பிறகு, யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார்.

15:8 எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

15:9 நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன். ஏனெனில், கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன்.

15:10 ஆனால், இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிடவில்லை. திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன். உண்மையில் நானாக உழைக்கவில்லை; என்னோடிருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது.

Gospel

Luke 18:9-14

18:9 தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:

18:10 “இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.

18:11 பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்;

18:12 வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.’

18:13 ஆனால், வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார்.”

18:14 இயேசு, “பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில், தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.