Trinity

12th Sunday after Trinity

Text cycle 1

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Psalm 115:1-9

115:1 எங்களுக்கன்று, ஆண்டவரே! எங்களுக்கன்று; மாட்சியை உம் பெயருக்கே உரித்தாக்கும்; உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு அதை உமக்கே உரியதாக்கும்.

115:2 ‘அவர்களுடைய கடவுள் எங்கே’ எனப் பிற இனத்தார் வினவுவது ஏன்?

115:3 நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்; தம் திருவுளப்படி அனைத்தையும் செய்கின்றார்.

115:4 அவர்களுடைய தெய்வச்சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே, வெறும் மனிதக் கைவேலையே!

115:5 அவற்றுக்கு வாய்கள் உண்டு; ஆனால் அவை பேசுவதில்லை; கண்கள் உண்டு; ஆனால் அவை பார்ப்பதில்லை;

115:6 செவிகள் உண்டு; ஆனால் அவை கேட்பதில்லை; மூக்குகள் உண்டு; ஆனால் அவை முகர்வதில்லை.

115:7 கைகள் உண்டு; ஆனால் அவை தொட்டுணர்வதில்லை; கால்கள் உண்டு; ஆனால் அவை நடப்பதில்லை; தொண்டைகள் உண்டு; ஆனால் அவை குரல் எழுப்புவதில்லை.

115:8 அவற்றைச் செய்கின்றோரும் அவற்றில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவற்றைப்போல் ஆவர்.

115:9 இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கைக் கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார்.

Epistle

2 Corinthians 3:4-9

3:4 கிறிஸ்துவின் வழியாய் நாங்கள் கடவுள்மேல் வைத்துள்ள உறுதியான நம்பிக்கையால்தான் இவ்வாறு சொல்லுகிறோம்.

3:5 நாங்களே செய்ததாக எதன் மேலும் உரிமைபாராட்டிக் கொள்ள எங்களுக்குத் தகுதி இல்லை. எங்கள் தகுதி கடவுளிடமிருந்தே வருகிறது.

3:6 அவரே புதிய உடன்படிக்கையின் பணியாளராகும் தகுதியை எங்களுக்குத் தந்தார். அவ்வுடன்படிக்கை, எழுதப்பட்ட சட்டத்தைச் சார்ந்ததல்ல; தூய ஆவியையே சார்ந்தது. ஏனெனில், எழுதப்பட்ட சட்டத்தால் விளைவது சாவு; தூய ஆவியால் விளைவது வாழ்வு.

3:7 கற்களில் பொறிக்கப்பட்ட அச்சட்டம் சார்ந்த திருப்பணி சாவை விளைவிப்பதாயிருந்தும் அது மாட்சியுடன் அருளப்பட்டது. விரைவில் மறையவேண்டியதாயிருந்த அம்மாட்சி மோசேயின் முகத்தில் இஸ்ரயேல் மக்கள் பார்க்க முடியாத அளவுக்கு ஒளிவீசியது.

3:8 அதுவே அப்படியிருந்தது என்றால் தூய ஆவிசார்ந்த திருப்பணி எத்துணை மாட்சி பொருந்தியதாயிருக்கும்!

3:9 தண்டனைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணியே இத்துணை மாட்சி பொருந்தியதாயிருந்தது என்றால் விடுதலைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணி எத்துணை மாட்சி நிறைந்ததாயிருக்கும்!

Gospel

Mark 7:31-37

7:31 மீண்டும் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார்.

7:32 காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர்.

7:33 இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்.

7:34 பிறகு, வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி “எப்பத்தா” அதாவது “திறக்கப்படு” என்றார்.

7:35 உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.

7:36 இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள்.

7:37 அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய் , “இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!” என்று பேசிக்கொண்டார்கள்.