Trinity

12th Sunday after Trinity

Text cycle 2

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Jonah 2

2:1 யோனா அந்த மீன் வயிற்றில் இருந்தவாறு, தம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடலானார்:

2:2 “ஆண்டவரே! எனக்கு இக்கட்டு வந்த வேளைகளில் நான் உம்மை நோக்கி மன்றாடினேன். § நீர் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தீர். பாதாளத்தின் நடுவிலிருந்து உம்மை நோக்கிக் கதறினேன்; என் கூக்குரலுக்கு நீர் செவிகொடுத்தீர்;

2:3 நடுக் கடலின் ஆழத்திற்குள் என்னைத் தள்ளினீர்; தண்ணீர்ப் பெருக்கு என்னைச் சூழ்ந்துகொண்டது. நீர் அனுப்பிய அலைதிரை எல்லாம் என்மீது புரண்டு கடந்து சென்றன.

2:4 அப்பொழுது நான், ‛உமது முன்னிலையிலிருந்து புறம்பே தள்ளப்பட்டேன்; இனி எவ்வாறு உமது கோவிலைப் பார்க்கப் போகிறேன்’ என்று சொல்லிக்கொண்டேன்.

2:5 மூச்சுத் திணறும்படி தண்ணீர் என்னை அழுத்திற்று; ஆழ்கடல் என்னைச் சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் § சுற்றிக் கொண்டது.

2:6 மலைகள் புதைந்துள்ள ஆழம்வரை நான் கீழுலகிற்கு இறங்கினேன். அங்கேயே என்னை என்றும் இருத்தி வைக்கும்படி, அதன் தாழ்ப்பாள்கள் அடைத்துக் கொண்டன. ஆனால், என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அந்தக் குழியிலிருந்து § என்னை உயிரோடு மீட்டீர்.

2:7 என் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தபோது, ஆண்டவரே! உம்மை நினைத்து வேண்டுதல் செய்தேன். உம்மை நோக்கி நான் எழுப்பிய மன்றாட்டு உமது கோவிலை வந்தடைந்தது.

2:8 பயனற்ற சிலைகளை வணங்குகின்றவர்கள் உம்மிடம் கொண்டிருந்த பற்றினைக் கைவிட்டார்கள்.

2:9 ஆனால், நான் உம்மைப் புகழ்ந்து பாடி உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; நான் செய்த பொருத்தனைகளை § நிறைவேற்றுவேன். மீட்பு அளிப்பவர் ஆண்டவரே” என்று வேண்டிக்கொண்டார்.

2:10 ஆண்டவர் அந்த மீனுக்குக் கட்டளையிட, அது யோனாவைக் கரையிலே கக்கியது.

Epistle

James 3:1-12

3:1 என் சகோதர சகோதரிகளே, உங்களுள் பலர் போதகர் ஆக விரும்பவேண்டாம். போதகர்களாகிய நாங்கள் மிகக் கண்டிப்பான தீர்ப்புக்கு உள்ளாக வேண்டுமென உங்களுக்குத் தெரியும்.

3:2 நாம் எல்லாருமே அடிக்கடி தவறுகிறோம். பேச்சில் தவறாதோர் நிறைவு பெற்றவராவர். அவர்களே தம் முழு உடலையும் கட்டுப்படுத்தவல்லவர்கள்.

3:3 குதிரைகளை அடக்க அவற்றின் வாயில் கடிவாளத்தைப் போடுகிறோம். இவ்வாறு குதிரைகளை முழுவதுமாகக் கட்டுப்படுத்துகிறோம்.

3:4 கப்பல்களைப் பாருங்கள். அவை எத்துணை பெரியனவாக இருந்தாலும்ட, கடுங்காற்றால் அடித்துச் செல்லப்பட்டாலும், கப்பலோட்டுவோர் சிறியதொரு சுக்கானைக் கொண்டு தாம் விரும்பும் திசையை நோக்கி அவற்றைச் செலுத்துகின்றனர்.

3:5 மனித நாவும் அதைப்போல ஒரு சிறிய உறுப்புதான். ஆனால், பெரிய காரியங்களைச் சாதிப்பதாக அது பெருமையடிக்கிறது.பாருங்கள், சிறியதொரு தீப்பொறி எத்துணை பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது.

3:6 நாவும் தீயைப் போன்றதுதான். நெறிகெட்ட உலகின் உருவே அது. நம்முடைய உறுப்புகளுள் ஒன்றாக அமைந்திருக்கும் இந்த நா நம் உடல் முழுவதையும் கறைப்படுத்துகிறது. அது நம் வாழ்க்கைச் சக்கரம் முழுவதையும் எரித்துவிடுகிறது; எரிப்பதற்கான நெருப்பை நரகத்திலிருந்தே பெறுகிறது.

3:7 காட்டில் வாழ்வன, பறப்பன, ஊர்வன, கடலில் வாழ்வன ஆகிய எல்லா உயிரினங்களையும் மனிதர் அடக்கிவிடலாம்; அடக்கியும் உள்ளனர்.

3:8 ஆனால், நாவை அடக்க யாராலும் முடிவதில்லை. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அது கொடியது; சாவை விளைவிக்கும் நஞ்சு நிறைந்தது.

3:9 தந்தையாம் ஆண்டவரைப் போற்றுவது அந்நாவே; கடவுளின் சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதரைத் தூற்றுவதும் அந்நாவே.

3:10 போற்றலும் தூற்றலும் ஒரே வாயிலிருந்து வருகின்றன. என் சகோதர சகோதரிகளே, இவ்வாறு இருத்தலாகாது.

3:11 ஒரே ஊற்றிலிருந்து நன்னீரும் உவர் நீரும் சுரக்குமா?

3:12 என் அன்பர்களே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும் திராட்சைச் செடி அத்திப் பழங்களையும் கொடுக்குமா? அவ்வாறே, உப்பு நீர்ச் சுனையிலிருந்து நன்னீர் கிடைக்காது.

Gospel

Matthew 12:31-42

12:31 எனவே, நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தூய ஆவிக்கு எதிரான பழிப்புரை மன்னிக்கப்படாது. மக்களுடைய மற்றப் பாவங்கள், பழிப்புரைகள் அனைத்தும் மன்னிக்கப்படும்.

12:32 மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெற மாட்டார்.

12:33 “மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால் அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம்.

12:34 விரியன் பாம்புக் குட்டிகளே, தீயோர்களாகிய நீங்கள் எவ்வாறு நல்லவை பேச முடியும்? உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.

12:35 நல்லவர் நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை வெளிக் கொணர்வர். தீயவரோ தீய கருவூலத்திலிருந்து தீயவற்றையே வெளிக்கொணர்வர்.

12:36 மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும் என உங்களுக்குச் சொல்கிறேன்

12:37 உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாகக் கருதப்படுவீர்கள்; உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும் கருதப்படுவீர்கள்.”

12:38 அப்பொழுது மறைநூல் அறிஞர் சிலரும் பரிசேயர் சிலரும் இயேசுவுக்கு மறுமொழியாக, “போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம்” என்றனர்.

12:39 அதற்கு அவர் கூறியது: “இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.

12:40 யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.

12:41 தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து, இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில், யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!

12:42 தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில், அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக் கோடியிலிருந்து வந்தவர். ஆனால், இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!