லேவியர் (லேவியராகமம்) 19:1-2 அல்லது லேவியர் (லேவியராகமம்) 19:9-18
லேவியர் (லேவியராகமம்) 19:1-2
19:1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
19:2 “நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது; தூயோராய் இருங்கள். ஏனெனில், உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்!
லேவியர் (லேவியராகமம்) 19:9-18
19:9 உங்கள் நாட்டில் நீங்கள் பயிரிட்டதை அறுவடை செய்யும்போது, வரப்பு ஓரக் கதிரை அறுக்கவேண்டாம். சிந்திக் கிடக்கும் கதிரையும் பொறுக்க வேண்டாம்;
19:10 திராட்சைத் தோட்டத்தில் பின்னறுப்பு வேண்டாம்; சிந்திக் கிடக்கும் பழங்களைப் பொறுக்க வேண்டாம். அவற்றை எளியோருக்கும் அந்நியருக்கும் விட்டுவிட வேண்டும். நானே உங்கள் ஆண்டவராகிய கடவுள்!
19:11 களவு செய்யாமலும், பொய் சொல்லாமலும் ஒருவரை ஒருவர் வஞ்சியாமலும்,
19:12 என் பெயரால் பொய்யாணையிட்டு, உங்கள் கடவுளின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தாமலும் இருங்கள். நான் ஆண்டவர்!
19:13 அடுத்திருப்பவரை ஒடுக்கவோ அவருக்குரியதைக் கொள்ளையிடவோ வேண்டாம்; வேலையாளின் கூலி விடியும்வரை உன்னிடம் இருத்தல் ஆகாது.
19:14 காது கேளாதோரைச் சபிக்காதே! பார்வையற்றோரை இடறச் செய்யாதே! உன் கடவுளுக்கு அஞ்சி நட. நான் ஆண்டவர்!
19:15 தீர்ப்பிடுகையில், அநீதி இழைக்காதே. சிறியோர் பெரியோர் என முகம் பாராது, உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு.
19:16 உன் இனத்தாருக்குள் புறங்கூறித் திரியாதே. உனக்கு அடுத்து வாழ்பவரின் குருதிப் பழிக்குக் காரணம் ஆகாதே! நான் ஆண்டவர்!
19:17 உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்து கொள்.
19:18 பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!