Trinity

13th Sunday after Trinity

Text cycle 2

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Micah 6:6-8

6:6 ஆண்டவரின் திருமுன் வரும்போது உன்னதரான கடவுளாகிய அவருக்கு எதைக் கொண்டுவந்து பணிந்து நிற்பேன்? எரிபலிகளோடும் ஒரு வயதுக் கன்றுகளோடும் அவர் முன்னிலையில் வரவேண்டுமா?

6:7 ஆயிரக்கணக்கான ஆட்டுக்கிடாய்கள் மேலும் பல்லாயிரக்கணக்கான ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும் எண்ணெய் மேலும் ஆண்டவர் விருப்பம் கொள்வாரோ? என் குற்றத்தை அகற்ற என் தலைப்பிள்ளையையும், என் பாவத்தைப் போக்க நான் பெற்ற குழந்தையையும் பலி கொடுக்க வேண்டுமா?

6:8 ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?

Epistle

1 Timothy 1:12-17

1:12 எனக்கு வலுவூட்டும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகின்றேன். ஏனெனில் நான் நம்பிக்கைக்குரியவன் என்று கருதி அவர் என்னைத் தம் திருத்தொண்டில் அமர்த்தினார்.

1:13 முன்னர் நான் அவரை பழித்துரைத்தேன்; துன்புறுத்தினேன்; இழிவுபடுத்தினேன். ஆயினும் நம்பிக்கை கொண்டிராத நிலையில் நான் அவ்வாறு நடந்ததால், அவர் எனக்கு இரங்கினார்.

1:14 இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் ஏற்படும் நம்பிக்கையோடும் அன்போடும் நம் ஆண்டவரின் அருள் அளவின்றிப் பெருகியது.

1:15 ‘பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார்’. — இக்கூற்று உண்மையானது; எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது. — அந்தப் பாவிகளுள் முதன்மையான பாவி நான்.

1:16 ஆயினும் கடவுள் எனக்கு இரங்கினார். நிலைவாழ்வை அடைய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்ள இருப்போருக்கு நான் முன்மாதிரியாய் விளங்கவேண்டும் என்பதற்காக முதன்முதலில் என்னிடம் தம் முழுப் பொறுமையைக் காட்டினார்.

1:17 அழிவில்லாத, கண்ணுக்குப் புலப்படாத, எக்காலத்துக்கும் அரசராயிருக்கின்ற ஒரே கடவுளுக்கு என்றென்றும் மாண்பும் மாட்சியும் உரித்தாகுக! ஆமென்.

Gospel

Matthew 20:20-28

20:20 பின்பு செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார்.

20:21 “உமக்கு என்ன வேண்டும்?” என்று இயேசு அவரிடம் கேட்டார். அவர், “நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்” என்று வேண்டினார்.

20:22 அதற்கு இயேசு, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?” என்று கேட்டார். அவர்கள் “எங்களால் இயலும்” என்றார்கள்.

20:23 அவர் அவர்களை நோக்கி, “ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்” என்றார்.

20:24 இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர் மீதும் கோபங் கொண்டனர்.

20:25 இயேசு அவர்களை வரவழைத்து, “பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். உயர்குடி மக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள்.

20:26 உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.

20:27 உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்.

20:28 இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.