20:20
பின்பு செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார்.
20:21
“உமக்கு என்ன வேண்டும்?” என்று இயேசு அவரிடம் கேட்டார். அவர், “நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்” என்று வேண்டினார்.
20:22
அதற்கு இயேசு, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?” என்று கேட்டார். அவர்கள் “எங்களால் இயலும்” என்றார்கள்.
20:23
அவர் அவர்களை நோக்கி, “ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்” என்றார்.
20:24
இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர் மீதும் கோபங் கொண்டனர்.
20:25
இயேசு அவர்களை வரவழைத்து, “பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். உயர்குடி மக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள்.
20:26
உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.
20:27
உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்.
20:28
இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.