Psalm 39:5-14
39:5 என் வாழ்நாளைச் சில விரற்கடை அளவாக்கினீர்; என் ஆயுட்காலம் உமது பார்வையில் ஒன்றுமில்லை; உண்மையில், மானிடர் அனைவரும் தம் உச்ச நிலையிலும் நீர்க்குமிழி போன்றவரே! (சேலா)
39:6 அவர்கள் நிழலைப்போல நடமாடுகின்றனர்; அவர்கள் வருந்தி உழைப்பது வீண்; அவர்கள் சேமித்து வைக்கின்றனர்; ஆனால் அதை அனுபவிப்பது யாரென அறியார்.
39:7 என் தலைவரே, நான் இப்போது எதை எதிர்பார்க்கட்டும்? நான் உம்மையே நம்பியிருக்கிறேன்.
39:8 என் குற்றங்கள் அனைத்தினின்றும் என்னை விடுவித்தருளும்; மதிகேடரின் பழிப்புரைக்கு என்னை ஆளாக்காதேயும்.
39:9 நான் ஊமைபோல் ஆனேன்; வாய் திறவேன்; ஏனெனில், எனக்கு இந்நிலைமையை வருவித்தவர் நீரே.
39:10 நீர் தந்த வாதையை என்னிடமிருந்து நீக்கிவிடும்; உமது கை அடித்த அடிகளால் நான் அழிவுக்கு ஆளானேன்.
39:11 குற்றத்தின் பொருட்டு நீர் மனிதரைத் தண்டிக்கும்போது, பூச்சி அரிப்பதுபோல், அவர்களுக்கு விருப்பமானவற்றை நீர் அழிக்கின்றீர்; உண்மையில் மானிடர் அனைவரும் நீர்க்குமிழி போன்றவரே! (சேலா)
39:12 ஆண்டவரே! என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; என்னுடைய மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் கண்ணீரைக் கண்டும் மௌனமாய் இராதேயும்; ஏனெனில், உமது முன்னிலையில் நான் ஓர் அன்னியன்; என் மூதாதையர் போன்று நான் ஒரு நாடோடி!
39:13 நான் பிரிந்து மறையும் முன்பு சற்றே மகிழ்ச்சி அடையும்படி, உம் கொடிய பார்வையை என்னிடமிருந்து திருப்பிக்கொள்ளும்.