தொடக்க நூல் (ஆதியாகமம்) 8:20-22 அல்லது தொடக்க நூல் (ஆதியாகமம்) 9:12-17
தொடக்க நூல் (ஆதியாகமம்) 8:20-22
8:20 அப்பொழுது நோவா ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி அதன்மேல் எல்லா வகைத் தக்க விலங்குகள், தக்க பறவைகளிலிருந்து எடுக்கப்பட்டவற்றை எரி பலியாகச் செலுத்தினார்.
8:21 ஆண்டவர் நறுமணத்தை நுகர்ந்து, தமக்குள் சொல்லிக் கொண்டது; “மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்கவே மாட்டேன். ஏனெனில், மனிதரின் இதயச் சிந்தனை இளமையிலிருந்தே தீமையை உருவாக்குகின்றது. இப்பொழுது நான் செய்ததுபோல இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன்.
8:22 மண்ணுலகு இருக்கும் நாளளவும் விதைக்கும் காலமும் அறுவடைக் காலமும் குளிரும் வெப்பமும், கோடைக்காலமும் குளிர்க்காலமும் பகலும் இரவும் என்றும் ஓய்வதில்லை.”
தொடக்க நூல் (ஆதியாகமம்) 9:12-17
9:12 அப்பொழுது கடவுள், “எனக்கும் உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் உயிருள்ள எல்லாவற்றிற்குமிடையே தலைமுறைதோறும் என்றென்றும் இருக்கும்படி, நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக,
9:13 என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன். எனக்கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும்.
9:14 மண்ணுலகின் மேல் நான் மேகத்தை வருவிக்க, அதன்மேல் வில் தோன்றும்பொழுது,
9:15 எனக்கும் உங்களுக்கும் சதையுள்ள உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் இடையே உள்ள என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன். உயிர்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்குத் தண்ணீர் இனி ஒருபோதும் பெருவெள்ளமாக மாறாது.
9:16 வில் மேகத்தின்மேல் தோன்றும்பொழுது அதை நான் கண்டு, கடவுளாகிய எனக்கும் மண்ணுலகில் இருக்கும் சதையுள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் இடையே என்றென்றுமுள்ள உடன்படிக்கையை நினைவுகூர்வேன்” என்றார்.
9:17 கடவுள் நோவாவிடம், “எனக்கும் மண்ணுலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் இடையே நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளம் இதுவே” என்றார்.