8:26
பின்பு, ஆண்டவரின் தூதர் பிலிப்பிடம், “நீ எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ” என்றார். அது ஒரு பாலைநிலப் பாதை.
8:27
பிலிப்பு அவ்வாறே புறப்பட்டுப்போனார். அப்போது எத்தியோப்பிய அரச அலுவலர் ஒருவர் எருசலேம் சென்று, கடவுளை வணங்கி விட்டுத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார். அவர் ஓர் அலி; எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர்.
8:28
அவர் தமது தேரில் அமர்ந்து எசாயாவின் இறைவாக்கு நூலைப் படித்துக் கொண்டிருந்தார்.
8:29
தூய ஆவியார் பிலிப்பிடம், “நீ அந்தத் தேரை நெருங்கிச் சென்று அதனோடு கூடவே போ” என்றார்.
8:30
பிலிப்பு ஓடிச் சென்று, அவர் எசாயாவின் இறைவாக்கு நூலை வாசிப்பதைக் கேட்டு, “நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா?” என்று கேட்டார்.
8:31
அதற்கு அவர், “யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்?” என்று கூறித்தேரில் ஏறித் தன்னோடு அமருமாறு பிலிப்பை அழைத்தார்.
8:32
அவர் வாசித்துக்கொண்டிருந்த மறைநூல் பகுதி பின்வருமாறு: “அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும், உரோமம் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர்தம் வாயைத் திறவாதிருந்தார்.
8:33
தாழ்வுற்ற நிலையில் அவருக்கு நீதி வழங்கப்படவில்லை. அவருடைய தலைமுறையைப் பற்றி எடுத்துரைப்பவன் யார்? ஏனெனில், அவருடைய உயிர்தான் எடுக்கப்பட்டுவிட்டதே!”
8:34
அவர் பிலிப்பிடம், “இறைவாக்கினர் யாரைக்குறித்து இதைக் கூறுகிறார்?தம்மைக் குறித்தா, அல்லது மற்றொருவரைக் குறித்தா? தயவுசெய்து கூறுவீரா?” என்று கேட்டார்.
8:35
அப்போது பிலிப்பு, இந்த மறைநூல் பகுதியிலிருந்து தொடங்கி, இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அவருக்கு அறிவித்தார்.
8:36
அவர்கள் போய்க் கொண்டிருந்தபோது வழியில் தண்ணீர் இருந்த ஓர் இடத்துக்கு வந்தார்கள். அப்போது அவர், “இதோ, தண்ணீர் உள்ளதே, நான் திருமுழுக்குப்பெற ஏதாவது தடை உண்டா?” என்று கேட்டார்.
8:37
‘அதற்குப் பிலிப்பு, “நீர் முழு உள்ளத்தோடு நம்பினால் தடையில்லை” என்றார். உடனே அவர், “இயேசு கிறிஸ்து இறைமகன் என்று நம்புகிறேன்” என்றார்.’
8:38
உடனே அமைச்சர் தேரை நிறுத்தக் கூறினார். பிலிப்பு, அமைச்சர் ஆகிய இருவரும் தண்ணீருக்குள் இறங்கினர். பிலிப்பு அவருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார்.
8:39
அவர்கள் தண்ணீரிலிருந்து வெளியேறினவுடனையே ஆண்டவரின் ஆவியார் பிலிப்புவை எடுத்துச் சென்றுவிட்டார். அமைச்சர் அதன்பின் அவரைக் காணவில்லை; அவர் மகிழச்சியோடு தம் வழியே சென்றார்.