திரித்துவ காலம்

மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் பதினைந்தாம் ஞாயிறு

உரைத்தொகுப்பு 2

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் (சங்கீதம்) 73:23-28

73:23 ஆனாலும், நான் எப்போதும் உமது முன்னிலையிலேதான் இருக்கின்றேன்; என் வலக்கையை ஆதரவாய்ப் பிடித்துள்ளீர்.

73:24 உமது திருவுளப்படியே என்னை நடத்துகின்றீர்; முடிவில் மாட்சியோடு என்னை எடுத்துக் கொள்வீர்.

73:25 விண்ணுலகில் உம்மையன்றி எனக்கிருப்பவர் யார்? மண்ணுலகில் வேறு விருப்பம் உம்மையன்றி எனக்கேதுமில்லை.

73:26 எனது உடலும் உள்ளமும் நைந்து போயின; கடவுளே என் உள்ளத்திற்கு அரணும் என்றென்றும் எனக்குரிய பங்கும் ஆவார்.

73:27 உண்மையிலேயே, உமக்குத் தொலைவாய் இருப்பவர்கள் அழிவார்கள்; உம்மைக் கைவிடும் அனைவரையும் அழித்துவிடும்.

73:28 நானோ கடவுளின் அண்மையே எனக்கு நலமெனக் கொள்வேன்; என் தலைவராகிய ஆண்டவரை என் அடைக்கலமாய்க்கொண்டு அவர்தம் செயல்களை எடுத்துரைப்பேன்.

திருமுகம்

திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 8:26-39

8:26 பின்பு, ஆண்டவரின் தூதர் பிலிப்பிடம், “நீ எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ” என்றார். அது ஒரு பாலைநிலப் பாதை.

8:27 பிலிப்பு அவ்வாறே புறப்பட்டுப்போனார். அப்போது எத்தியோப்பிய அரச அலுவலர் ஒருவர் எருசலேம் சென்று, கடவுளை வணங்கி விட்டுத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார். அவர் ஓர் அலி; எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர்.

8:28 அவர் தமது தேரில் அமர்ந்து எசாயாவின் இறைவாக்கு நூலைப் படித்துக் கொண்டிருந்தார்.

8:29 தூய ஆவியார் பிலிப்பிடம், “நீ அந்தத் தேரை நெருங்கிச் சென்று அதனோடு கூடவே போ” என்றார்.

8:30 பிலிப்பு ஓடிச் சென்று, அவர் எசாயாவின் இறைவாக்கு நூலை வாசிப்பதைக் கேட்டு, “நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா?” என்று கேட்டார்.

8:31 அதற்கு அவர், “யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்?” என்று கூறித்தேரில் ஏறித் தன்னோடு அமருமாறு பிலிப்பை அழைத்தார்.

8:32 அவர் வாசித்துக்கொண்டிருந்த மறைநூல் பகுதி பின்வருமாறு: “அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும், உரோமம் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர்தம் வாயைத் திறவாதிருந்தார்.

8:33 தாழ்வுற்ற நிலையில் அவருக்கு நீதி வழங்கப்படவில்லை. அவருடைய தலைமுறையைப் பற்றி எடுத்துரைப்பவன் யார்? ஏனெனில், அவருடைய உயிர்தான் எடுக்கப்பட்டுவிட்டதே!”

8:34 அவர் பிலிப்பிடம், “இறைவாக்கினர் யாரைக்குறித்து இதைக் கூறுகிறார்?தம்மைக் குறித்தா, அல்லது மற்றொருவரைக் குறித்தா? தயவுசெய்து கூறுவீரா?” என்று கேட்டார்.

8:35 அப்போது பிலிப்பு, இந்த மறைநூல் பகுதியிலிருந்து தொடங்கி, இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அவருக்கு அறிவித்தார்.

8:36 அவர்கள் போய்க் கொண்டிருந்தபோது வழியில் தண்ணீர் இருந்த ஓர் இடத்துக்கு வந்தார்கள். அப்போது அவர், “இதோ, தண்ணீர் உள்ளதே, நான் திருமுழுக்குப்பெற ஏதாவது தடை உண்டா?” என்று கேட்டார்.

8:37 ‘அதற்குப் பிலிப்பு, “நீர் முழு உள்ளத்தோடு நம்பினால் தடையில்லை” என்றார். உடனே அவர், “இயேசு கிறிஸ்து இறைமகன் என்று நம்புகிறேன்” என்றார்.’

8:38 உடனே அமைச்சர் தேரை நிறுத்தக் கூறினார். பிலிப்பு, அமைச்சர் ஆகிய இருவரும் தண்ணீருக்குள் இறங்கினர். பிலிப்பு அவருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார்.

8:39 அவர்கள் தண்ணீரிலிருந்து வெளியேறினவுடனையே ஆண்டவரின் ஆவியார் பிலிப்புவை எடுத்துச் சென்றுவிட்டார். அமைச்சர் அதன்பின் அவரைக் காணவில்லை; அவர் மகிழச்சியோடு தம் வழியே சென்றார்.

நற்செய்தி

லூக்கா நற்செய்தி (லூக்கா) 10:38-42

10:38 அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா.

10:39 அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

10:40 ஆனால், மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்” என்றார்.

10:41 ஆண்டவர் அவரைப் பார்த்து, “மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

10:42 ஆனால், தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்