திரித்துவ காலம்

மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் பதினாறாம் ஞாயிறு

உரைத்தொகுப்பு 2

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் (சங்கீதம்) 139:1-12

139:1 ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!

139:2 நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.

139:3 நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே.

139:4 ஆண்டவரே! என் வாயில் சொல் உருவாகு முன்பே, அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர்.

139:5 எனக்கு முன்னும் பின்னும் என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர்; உமது கையால் என்னைப் பற்றிப்பிடிக்கின்றீர்.

139:6 என்னைப்பற்றிய உம் அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது; அது உன்னதமானது; என் அறிவுக்கு எட்டாதது.

139:7 உமது ஆற்றலைவிட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்?

139:8 நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்! பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்!

139:9 நான் கதிரவனின் இடத்திற்கும் பறந்து சென்றாலும் மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும்,

139:10 அங்கேயும் உமது கை என்னை நடத்திச் செல்லும்; உமது வலக்கை என்னைப் பற்றிக் கொள்ளும்.

139:11 ‘உண்மையில் இருள் என்னை மூடிக்கொள்ளாதோ? ஒளி சூழ்வதென இரவும் என்னைச் சூழ்ந்து கொள்ளாதோ?’ என்று நான் சொன்னாலும்,

139:12 இருள்கூட உமக்கு இருட்டாய் இல்லை; இரவும் பகலைப்போல ஒளியாய் இருக்கின்றது; இருளும் உமக்கு ஒளிபோல் இருக்கும்.

திருமுகம்

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் (1 கொரிந்தியர்) 15:21-28

15:21 ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்ததுபோல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர்.

15:22 ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர்.

15:23 ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர்பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர்.

15:24 அதன்பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்துவிட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார்.

15:25 எல்லாப் பகைவரையும் அடிபணியவைக்கும்வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும்.

15:26 சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும்.

15:27 ஏனெனில், “கடவுள் எல்லாவற்றையும் அவருக்கு அடிபணியச் செய்தார்.” ஆனால், எல்லாம் அடிபணிந்தன என்று சொல்லும்போது அனைத்தையும் கிறிஸ்துவுக்கு அடிபணிய வைக்கும் கடவுளைத் தவிர மற்றவை யாவும் அடிபணிந்தன என்பது தெளிவாகிறது.

15:28 அனைத்துமே மகனுக்கு அடிபணியும்போது தமக்கு அனைத்தையும் அடிபணியச் செய்த கடவுளுக்கு மகனும் அடிபணிவார். அப்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்.

நற்செய்தி

யோவான் நற்செய்தி (யோவான்) 11:19-45

11:19 சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர்.

11:20 இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார்.

11:21 மார்த்தா இயேசவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்.

11:22 இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்” என்றார்.

11:23 இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார்.

11:24 மார்த்தா அவரிடம் , “இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்” என்றார்.

11:25 இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.

11:26 உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார்.

11:27 மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார்.

11:28 இவ்வாறு சொன்னபின் மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்; அவரிடம், “போதகர் வந்து விட்டார்; உன்னை அழைக்கிறார்” என்று காதோடு காதாய்ச் சொன்னார்.

11:29 இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார்.

11:30 இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வரவில்லை. மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார்.

11:31 வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு, அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள்.

11:32 இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்றார்.

11:33 மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி,

11:34 “அவனை எங்கே வைத்தீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “ஆண்டவரே, வந்து பாரும்” என்றார்கள்.

11:35 அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார்.

11:36 அதைக் கண்ட யூதர்கள், “பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!” என்று பேசிக் கொண்டார்கள்.

11:37 ஆனால், அவர்களுள் சிலர், “பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா?” என்று கேட்டனர்.

11:38 இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது.

11:39 “கல்லை அகற்றி விடுங்கள்” என்றார் இயேசு. இறந்து போனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், “ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!” என்றார்.

11:40 இயேசு அவரிடம், “நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?” என்று கேட்டார்.

11:41 அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, “தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.

11:42 நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும், நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்” என்று கூறினார்.

11:43 இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், “இலாசரே, வெளியே வா” என்று கூப்பிட்டார்.

11:44 இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. “கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்” என்று இயேசு அவர்களிடம் கூறினார்.

11:45 மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்.