Trinity

17th Sunday after Trinity

Text cycle 1

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Psalm 19:2-7

19:2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது.

19:3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.

19:4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; § அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார்.

19:5 மணவறையிலிருந்து புறப்படும் மணமகனைப் போல அது வருகின்றது; பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல மகிழ்வோடு அது தன் பாதையில் ஓடுகின்றது.

19:6 அது வானத்தின் ஒரு முனையிலிருந்து புறப்படுகின்றது; அதன் பாதை மறுமுனைவரையிலும் செல்கின்றது; அதன் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை.

19:7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது § ஞானம் அளிக்கின்றது.

Epistle

Ephesians 4:1-6

4:1 ஆதலால், ஆண்டவர் பொருட்டு கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள்.

4:2 முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி,

4:3 அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்.

4:4 நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே.

4:5 அவ்வாறே, ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே.

4:6 எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

Gospel

Luke 14:1-11

14:1 ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.

14:2 அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார்.

14:3 இயேசு திருச்சட்ட அறிஞரையும் பரிசேயரையும் பார்த்து, “ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?” என்று கேட்டார்.

14:4 அவர்கள் அமைதியாய் இருந்தனர். இயேசு அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார்.

14:5 பிறகு, அவர்களை நோக்கி, “உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வுநாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?” என்று கேட்டார்.

14:6 அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை.

14:7 விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை:

14:8 “ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம்.

14:9 உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ‘இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்’ என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும்.

14:10 நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ‘நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்’ எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள்.

14:11 தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.”