Trinity

18th Sunday after Trinity

Text cycle 1

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Isaiah 40:18-25

40:18 இறைவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு நிகராகக் கொள்வீர்கள்?

40:19 சிலை வடிவத்தையா? அதைச் சிற்பி வார்க்கிறான்; பொற்கொல்லன் அதைப் பொன்னால் வேய்கிறான்; வெள்ளிச் சங்கிலிகளை அதற்கென அமைக்கிறான்.

40:20 இத்தகைய நேர்ச்சையை நிறைவேற்ற இயலா வறியவன் உளுத்துப்போகா மரத்தைத் தேர்ந்து கொள்கிறான்; அசைக்க முடியாச் சிலையொன்றை நிறுவ அவன் கைவினைஞனைத் தேடுகிறான்.

40:21 உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் கேள்விப்படவில்லையா? தொடக்கத்திலிருந்தே உங்களுக்கு அறிவிக்கப்படவில்லையா? மண்ணுலகின் அடித்தளங்கள் இடப்பட்டதுபற்றி நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?

40:22 உலகின் விதானத்தின் மீது வீற்றிருப்பவர் அவரே; மண்ணில் வாழ்வோர் வெட்டுக்கிளி போல்வர்; வான் வெளியைத் திரைச் சீலையென விரித்துக் குடியிருக்கும் கூடாரம்போல் அதை அமைப்பவரும் அவரே.

40:23 ஆள்வோரை வீழ்த்துபவர் அவரே; மண்ணுலகின் தலைவர்களை ஒன்றுமில்லாது ஆக்குபவர் அவரே.

40:24 அவர்கள் நடப்படுகிறார்கள்; விதைக்கப்படுகிறார்கள்; ஆனால் அவர்களின் தண்டு நிலத்தில் வேர்விடுவதற்குள், அவர்கள்மேல் அவர் ஊத, அவர்கள் வாடிவதங்குகின்றனர். சூறைக்காற்று அவர்களைத் துரும்பென அடித்துச் செல்கிறது.

40:25 ‘யாருக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? எனக்கு நிகரானவர் யார்?’ என்கிறார் தூயவர்.

Epistle

1 Corinthians 1:4-8

1:4 கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன்.

1:5 ஏனெனில், நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள்.

1:6 மேலும் கிறிஸ்துவைப்பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

1:7 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை.

1:8 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார்.

Gospel

Matthew 22:34-46

22:34 இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர்.

22:35-36 அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், “போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார்.

22:37 அவர், “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’

22:38 இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.

22:39 ‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.

22:40 திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன” என்று பதிலளித்தார்.

22:41 பரிசேயர் ஒன்றுகூடி வந்தபோது இயேசுவும் அவர்களைப் பார்த்து கேள்வி கேட்கத் தொடங்கினார்.

22:42 அவர், “மெசியாவைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்?” என்று கேட்டார். அவர்கள், “தாவீதின் மகன்” என்று பதிலளித்தார்கள்.

22:43 இயேசு அவர்களிடம், “அப்படியானால் தாவீது தூய ஆவியின் தூண்டுதலால் அவரைத் தலைவர் என அழைப்பது எப்படி?

22:44 ‘ஆண்டவர் என் தலைவரிடம், "நான் உம் பகைவரை உமக்குஅடிபணிய வைக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்!" என்று உரைத்தார்’ என அவரே கூறியுள்ளார் அல்லவா!

22:45 எனவே, தாவீது அவரைத் தலைவர் என அழைப்பதால் அவர் அவருக்கே மகனாய் இருப்பது எப்படி?” என்று கேட்டார்.

22:46 அதற்கு எவரும் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகக் கூற இயலவில்லை. அந்நாள் முதல் அவரிடம் எவரும் எதுவும் கேட்கத் துணியவில்லை.