Isaiah 44:22-28
44:22 உன் குற்றங்களைக் கார்மேகம் போலும், உன் பாவங்களைப் பனிப்படலம் போலும் அகற்றிவிட்டேன். என்னிடம் திரும்பி வா, நான் உனக்கு மீட்பளித்துவிட்டேன்.
44:23 வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்; ஆண்டவர் இதைச் செய்தார்; மண்ணுலகின் அடித்தளங்களே, ஆர்ப்பரியுங்கள்; மலைகளே, காடே, அங்குள்ள அனைத்து மரங்களே, களிப்புற்று முழங்குங்கள்; ஏனெனில் ஆண்டவர் யாக்கோபை மீட்டருளினார்; இஸ்ரயேலில் அவர் மாட்சி பெறுகிறார்.
44:24 கருப்பையில் உன்னை உருவாக்கிய உன் மீட்பரான ஆண்டவர் கூறுவது இதுவே: அனைத்தையும் படைத்த ஆண்டவர் நானே; யார் துணையுமின்றி நானாக வானங்களை விரித்து மண்ணுலகைப் பரப்பினேன்.
44:25 பொய்யர் சொல்லும் குறிகள் பலிக்காதவாறு செய்கின்றேன்; மந்திரவாதிகளை மடையராக்குகின்றேன்; ஞானிகளை இழிவுறச் செய்து அவர்களது அறிவு மடமையெனக் காட்டுகின்றேன்;
44:26 என் ஊழியன் சொன்ன வார்த்தையை உறுதிப்படுத்துகின்றேன்; என் தூதர் அறிவித்த திட்டத்தை நிறைவேற்றுகின்றேன்; எருசலேமை நோக்கி, ‘நீ குடியமர்த்தப் பெறுவாய்’ என்றும் யூதா நகர்களிடம், ‘நீங்கள் கட்டியெழுப்பப் பெறுவீர்கள்’ என்றும் அவற்றின் பாழடைந்த இடங்களைச் சீரமைப்பேன்’ என்றும் கூறுகின்றேன்.
44:27 ஆழ்நீர்த்தளங்களைப் பார்த்து, ‘வற்றிப்போ; உன் ஆறுகளை உலர்ந்த தரையாக்குவேன்’ என்றும் உரைக்கின்றேன்.
44:28 சைரசு மன்னனைப்பற்றி, ‘அவன் நான் நியமித்த ஆயன்; என் விருப்பத்தை நிறைவேற்றுவான்’ என்றும், எருசலேமைப்பற்றி, ‘அது கட்டியெழுப்பப்படும்’ என்றும், திருக்கோவிலைப்பற்றி, ‘உனக்கு அடித்தளம் இடப்படும்’ என்றும் கூறுவதும் நானே.