திரித்துவ காலம்

மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் பத்தொன்பதாம் ஞாயிறு

உரைத்தொகுப்பு 1

வேதாகம மொழிபெயர்ப்பு

பரிசுத்த வேதாகமம் — தமிழ் பழைய பதிப்பு வேதாகமம்

📜
பழைய ஏற்பாடு

எசாயா (ஏசாயா) 44:22-28

44:22 உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.

44:23 வானங்களே, களித்துப் பாடுங்கள்; கர்த்தர் இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் யாக்கோபை மீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார்.

44:24 உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.

44:25 நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவர்.

44:26 நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் ஸ்தானாபதிகளின் ஆலோசனையை நிறைவேற்றி: குடியேறுவாய் என்று எருசலேமுக்கும், கட்டப்படுவீர்கள் என்று யூதாவின் பட்டணங்களுக்கும் சொல்லி, அவைகளின் பாழான ஸ்தலங்களை எடுப்பிப்பவர்.

44:27 நான் ஆழத்தை நோக்கி: வற்றிப்போ என்றும், உன் நதிகளை வெட்டாந்தரையாக்குவேன் என்றும் சொல்லுகிறவர்.

44:28 கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்.

திருமுகம்

எபேசியருக்கு எழுதிய திருமுகம் (எபேசியர்) 4:22-28

4:22 அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,

4:23 உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,

4:24 மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.

4:25 அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.

4:26 நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;

4:27 பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.

4:28 திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.

நற்செய்தி

மாற்கு நற்செய்தி (மாற்கு) 2:1-12

2:1 சிலநாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டிலிருக்கிறாரென்று ஜனங்கள் கேள்விப்பட்டு;

2:2 உடனே வாசலுக்கு முன்னும் நிற்க இடம்போதாதபடிக்கு அநேகர் கூடிவந்தார்கள்; அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார்.

2:3 அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்;

2:4 ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்.

2:5 இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

2:6 அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்:

2:7 இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.

2:8 அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன?

2:9 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது?

2:10 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி:

2:11 நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

2:12 உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்குமுன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.