உயிர்ப்புக் காலம்

கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்குப் பின்வரும் முதல் ஞாயிறு

உரைத்தொகுப்பு 2

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

எசாயா (ஏசாயா) 43:10-12

43:10 “நீங்கள் என் சாட்சிகள்” என்கிறார் ஆண்டவர்; ‘நான் தேர்ந்தெடுத்த என் ஊழியனும் நீங்களே; என்னை அறிந்து என்மீது நம்பிக்கை வைப்பீர்கள்; ‘நானே அவர்’ என்பதை உணர்ந்து கொள்வீர்கள்; எனக்கு முன் எந்தத் தெய்வமும் உருவாக்கப்படவில்லை; எனக்குப்பின் எதுவும் இருப்பதில்லை.

43:11 நான், ஆம், நானே ஆண்டவர்; என்னையன்றி வேறு மீட்பர் இல்லை.

43:12 அறிவித்தது, விடுதலை அளித்தது, பறைசாற்றியது அனைத்தும் நானே; உங்களிடையே உள்ள வேறு தெய்வமன்று; நீங்களே என் சாட்சிகள், என்கிறார் ஆண்டவர்!

திருமுகம்

திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 2:22-28 அல்லது பேதுரு எழுதிய முதல் திருமுகம் (1 பேதுரு) 1:17-25

திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 2:22-28

2:22 இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்.கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்லசெயல்களையும் அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக்காண்பித்தார். இது நீங்கள் அறிந்ததே.

2:23 கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீங்கள் திருச்சட்டம் அறியாதார் மூலம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள்.

2:24 ஆனால், கடவுள் அவரை மரணவேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச்செய்தார். ஏனென்றால், மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.

2:25 தாவீது அவரைக்குறித்துக் கூறியது: ‘நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன்.

2:26 இதனால் என் இதயம் பேருவகை கொள்கின்றது; என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும்.

2:27 ஏனென்றால், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுக்குழியைக் காணவிடமாட்டீர்.

2:28 வாழ்வின் வழியை நான் அறியச்செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.’

பேதுரு எழுதிய முதல் திருமுகம் (1 பேதுரு) 1:17-25

1:17 நீங்கள் ‘தந்தையே’ என அழைத்து மன்றாடுபவர், ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின் படியே தீர்ப்பு வழங்குகிறார். ஆகையால், இவ்வுலகில் நீங்கள் அந்நியராய் வாழும் காலமெல்லாம் அவருக்கு அஞ்சி வாழுங்கள்.

1:18 உங்கள் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல;

1:19 மாறாக, மாசு மறுவற்ற ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள இரத்தமாகும்.

1:20 உலகம் தோன்றுமுன்னரே முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக் கடைசிக் காலத்தில் உங்களுக்காக வெளிப்படுத்தப்பட்டார்.

1:21 அவர் வழியாகத்தான் நீங்கள் கடவுள்மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து பெருமைப்படுத்தியுள்ளார். இதனால், நீங்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டு அவரை எதிர்நோக்கி இருக்கவே இவ்வாறு செய்தார்.

1:22 உண்மைக்குக் கீழ்ப்படிந்து உங்கள் ஆன்மா தூய்மை அடைந்துள்ளதால் நீங்கள் வெளிவேடமற்ற முறையில் சகோதர அன்பு காட்ட முடியும். எனவே, நீங்கள் தூய உள்ளத்தோடு ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்.

1:23 நீங்கள் அழியக்கூடிய வித்தினால் அல்ல; மாறாக, உயிருள்ளதும், நிலைத்திருப்பதுமான, அழியாவித்தாகிய கடவுளின் வார்த்தையால் புதுப்பிறப்பு அடைந்துள்ளீர்கள்.

1:24 ஏனெனில்,“மானிடர் அனைவரும் புல்லைப் போன்றவர்; அவர்களது மேன்மை வயல்வெளிப் பூவைப் போன்றது; புல் உலர்ந்ததுபோம்; பூ வதங்கி விழும்;

1:25 நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.” இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி.

நற்செய்தி

யோவான் நற்செய்தி (யோவான்) 21:15-19

21:15 அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்” என்றார்.

21:16 இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளை மேய்” என்றார்.

21:17 மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?” என்று கேட்டார். ‘உனக்கு என்னிடம் அன்பு உண்டா?’ என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளைப் பேணிவளர்” என்றார்.

21:18 “நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார்.

21:19 பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின் பேதுருவிடம், “என்னைப் பின்தொடர்” என்றார்.