திரித்துவ காலம்

மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் முதல் ஞாயிறு

உரைத்தொகுப்பு 1

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

எசாயா (ஏசாயா) 58:5-12

58:5 ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணாநோன்பின் நாளாகத் தெரிந்து கொள்வது? ஒருவன் நாணலைப் போல் தன் தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையையும் சாம்பலையையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நீங்கள் நோன்பு என்றும் ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் அழைக்கின்றீர்கள்?

58:6 கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு!

58:7 பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!

58:8 அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும்.

58:9 அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்; அவர் ‘இதோ! நான்’ என மறுமொழி தருவார். உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு,

58:10 பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.

58:11 ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்; வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்; உன் எலும்புகளை வலிமையாக்குவார்; நீயும் நீர் பாய்ந்த தோட்டம்போலும், ஒருபோதும் வற்றாத நீரூற்றுபோலும் இருப்பாய்.

58:12 உன் மக்கள் பண்டை நாளிலிருந்து பாழடைந்து கிடப்பவற்றைக் கட்டியெழுப்புவர்; தலைமுறை தலைமுறையாக உள்ள அடித்தளங்களின் மேல் கட்டியெழுப்புவாய்; தகர்ந்த மதிலைத் திரும்பக் கட்டுபவன் என்றும் குடியிருப்பதற்குத் தெருக்களைச் சீர்படுத்துபவன் என்றும் பெயர் பெறுவாய்.

திருமுகம்

யோவான் எழுதிய முதல் திருமுகம் (1 யோவான்) 4:16-21

4:16 கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம். கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பில் நிலைத்திருகிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்.

4:17 கடவுள் இருப்பதுபோல் நாமும் இவ்வுலகில் இருக்கிறோம். எனவே, தீர்ப்பு நாளில் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்போம். இவ்வாறு, நம்மிடையே உள்ள அன்பு நிறைவடைகிறது.

4:18 அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும். ஏனெனில், அச்சத்தில் தண்டனை உணர்வு அடங்கியுள்ளது; அச்சம் கொண்டுள்ளவரிடம் அன்பு முழு நிறைவு அடையாது.

4:19 அவரே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம்.

4:20 கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது.

4:21 கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரிடமிருந்து நாம் பெற்ற கட்டளை.

நற்செய்தி

லூக்கா நற்செய்தி (லூக்கா) 16:19-31

16:19 “செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.

16:20 இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார்.

16:21 அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.

16:22 அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

16:23 அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார்.

16:24 அவர், ‘தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில், இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்’ என்று உரக்கக் கூறினார்.

16:25 அதற்கு ஆபிரகாம், ‘மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.

16:26 அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால், இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது’ என்றார்.

16:27 “அவர், ‘அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன்.

16:28 எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே’ என்றார்.

16:29 அதற்கு ஆபிரகாம், ‘மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்’ என்றார்.

16:30 அவர், ‘அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்’ என்றார்.

16:31 ஆபிரகாம், ‘அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்’ என்றார்.”