Trinity

1st Sunday after Trinity

Text cycle 2

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Ecclesiastes 5:9-19

5:9 ‘பொதுநலம்’, ‘நாட்டுத் தொண்டு’ என்ற சொற்களும் உன் காதில் விழும்.

5:10 பண ஆசை உள்ளவருக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் ஆவல் தீராது; செல்வத்தின்மேல் மிகுந்த ஆசை வைப்பவர் அதனால் பயனடையாமற்போகிறார். இதுவும் வீணே.

5:11 சொத்து பெருகினால் அதைச் சுரண்டித் தின்போரின் எண்ணிக்கையும் பெருகும். செல்வர்களுக்குத் தங்கள் சொத்தைக் கண்ணால் பார்ப்பதைத் தவிர வேறு என்ன பயன் உண்டு?

5:12 வேலை செய்கிறவரிடம் போதுமான சாப்பாடு இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம்; ஆனால், அவருக்கு நல்ல தூக்கமாவது இருக்கும். செல்வரது செல்வப் பெருக்கே அவரைத் தூங்கவிடாது.

5:13 உலகில் ஒரு பெருந்தீங்கை நான் கண்டேன். ஒருவர் சேமிக்கும் செல்வம் அவருக்குத் துன்பத்தையே விளைவிக்கும்.

5:14 ஒருவர் ஒரு நட்டம்தரும் தொழிலில் ஈடுபட்டுத் தம் செல்வத்தை இழக்கிறார். அவருக்கு ஒரு பிள்ளை உள்ளது. ஆனால், அப்பிள்ளைக்குக் கொடுப்பதற்கோ ஒன்றுமில்லை.

5:15 மனிதர் தாயின் வயிற்றிலிருந்து வெற்றுடம்போடு வருகின்றனர்; வருவது போலவே இவ்வுலகை விட்டுப் போகின்றனர். அவர் தம் உழைப்பினால் ஈட்டும் பயன் எதையும் தம்மோடு எடுத்துச் செல்வதில்லை.

5:16 இது கொடிய தீங்காகும். அவர் எப்படி வந்தாரோ அப்படியே மீளுகிறார்; காற்றைப் பிடிக்கப் பாடுபடுகிறார்.

5:17 அவர் அடையும் பயன் என்ன? வாழ்நாள் முழுவதும் இருள், கவலை, பிணி, எரிச்சல், துன்பம்.

5:18 ஆகையால், நான் இந்த முடிவுக்கு வந்தேன்; தமக்குக் கடவுள் வரையறுத்திருக்கும் குறுகிய வாழ்நாளில் மனிதர் உண்டு குடித்து, உலகில் நம் உழைப்பின் பயனைத் துய்ப்பதே நலம்; அதுவே தகுந்ததுமாகும்.

5:19 கடவுள் ஒருவருக்குப் பெருஞ்செல்வமும் நல்வாழ்வும் கொடுத்து, அவற்றை அவர் துய்த்து மகிழும் வாய்ப்பையும் அளிப்பாரானால், அவர் நன்றியோடு தம் உழைப்பின் பயனை நுகர்ந்து இன்புறலாம். அது அவருக்குக் கடவுள் அருளும் நன்கொடை.

Epistle

1 Timothy 6:6-12

6:6 இறைப்பற்று பெரும் ஆதாயம் தருவதுதான்; ஆனால், மனநிறைவுள்ளவர்களுக்கே தரும்.

6:7 உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது.

6:8 எனவே, உணவும் உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம்.

6:9 செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கிறார்கள்; அறிவீனமான, தீமை விளைவிக்கக்கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை.

6:10 பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக் கொள்கிறார்கள்.

6:11 கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றை நாடித்தேடு.

6:12 விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலைவாழ்வைப் பற்றிக்கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய். அதனை முன்னிட்டே பல சாட்சிகள் முன்னிலையில் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்டாய்.

Gospel

Luke 12:13-21

12:13 கூட்டத்திலிருந்து ஒருவர் இயேசுவிடம், “போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்” என்றார்.

12:14 அவர் அந்த ஆளை நோக்கி, “என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?” என்று கேட்டார்.

12:15 பின்பு அவர் அவர்களை நோக்கி, “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” என்றார்.

12:16 அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: “செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.

12:17 அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!’ என்று எண்ணினான்.

12:18 ‘ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்’.

12:19 பின்பு, "என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு" எனச் சொல்வேன்’ என்று தனக்குள் கூறிக்கொண்டான்.

12:20 ஆனால், கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார்.

12:21 கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.”