Prædikerens Bog 5,9-19
5:9 பூமியில் விளையும் பலன் யாவருக்குமுரியது; ராஜாவும் வயலின் பலனால் ஆதரிக்கப்படுகிறான்.
5:10 பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.
5:11 பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்கள் கண்களினால் அதைக் காண்பதேயன்றி அவர்களுக்குப் பிரயோஜனம் என்ன?
5:12 வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது.
5:13 சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு; அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடுண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம்.
5:14 அந்த ஐசுவரியம் விக்கினத்தால் அழிந்துபோகிறது; அவன் ஒரு புத்திரனைப் பெறுகிறான், அவன் கையில் யாதொன்றும் இல்லை.
5:15 தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பப்போவான்; அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக்கொண்டுபோவதில்லை.
5:16 அவன் வந்தபிரகாரமே போகிறான், இதுவும் கொடுமையான தீங்கு; அவன் காற்றுக்குப் பிரயாசப்பட்டதினால் அவனுக்கு லாபம் என்ன?
5:17 அவன் தன் நாட்களிலெல்லாம் இருளிலே புசித்து, மிகவும் சலித்து, நோயும் துன்பமும் அடைகிறான்.
5:18 இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு.
5:19 தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.