தொடக்க நூல் (ஆதியாகமம்) 3:1-19
3:1 ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், “கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?” என்று கேட்டது.
3:2 பெண் பாம்பிடம், “தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம்.
3:3 ஆனால், ‘தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்’ என்று கடவுள் சொன்னார்,” என்றாள்.
3:4 பாம்பு பெண்ணிடம், “நீங்கள் சாகவே மாட்டீர்கள்;
3:5 ஏனெனில், நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்” என்றது.
3:6 அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான்.
3:7 அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.
3:8 மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக்கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிருந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர்.
3:9 ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார்.
3:10 “உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன்.
3:11 “நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார்.
3:12 அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான்.
3:13 ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள்.
3:14 ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், § “நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டுவிலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய்.
3:15 உனக்கும் பெண்ணுக்கும், § உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார்.
3:16 அவர் பெண்ணிடம், § “உன் மகப்பேற்றின் வேதனையை மிகுதியாக்குவேன்; வேதனையில் நீ குழந்தைகள் பெறுவாய். ஆயினும் உன் கணவன்மேல் நீ வேட்கைகொள்வாய்; அவனோ உன்னை ஆள்வான்” என்றார்.
3:17 அவர் மனிதனிடம், § “உன் மனைவியின் சொல்லைக் கேட்டு, உண்ணக்கூடாது என்று நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது; உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து நீ உண்பாய்.
3:18 முட்செடியையும் முட்புதரையும் உனக்கு அது முளைப்பிக்கும். வயல் வெளிப் பயிர்களை நீ உண்பாய்.
3:19 நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும்வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்” என்றார்.