Lent

1st Sunday in Lent

Text cycle 2

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Genesis 4:1-12

4:1 ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி வாழ்ந்தான். அவள் கருவுற்றுக் காயினைப் பெற்றெடுத்தாள். அவள் “ஆண்டவர் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்” என்றாள்.

4:2 பின்பு, அவள் அவன் சகோதரன் ஆபேலைப் பெற்றெடுத்தாள். ஆபேல் ஆடு மேய்ப்பவன் ஆனான். காயின் நிலத்தைப் பண்படுத்துபவன் ஆனான்.

4:3 சில நாள்கள் சென்றன. காயின் நிலத்தின் பலனிலிருந்து ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வந்தான்.

4:4 ஆபேலும் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான். ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார்.

4:5 ஆனால், காயினையும் அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை. ஆகவே, காயின் கடுஞ்சினமுற்றான். அவன் முகம் வாடியது.

4:6 ஆகவே, ஆண்டவர் காயினிடம், “நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்?

4:7 நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆளவேண்டும்” என்றார்.

4:8 காயின் தன் சகோதரன் ஆபேலிடம், “நாம் வயல்வெளிக்குப் போவோம்” என்றான். அவர்கள் வெளியில் இருந்தபொழுது, காயின் தன் சகோதரன் ஆபேலின் மேல் பாய்ந்து அவனைக் கொன்றான்.

4:9 ஆண்டவர் காயினிடம், “உன் சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவன், “எனக்குத் தெரியாது. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?” என்றான்.

4:10 அதற்கு ஆண்டவர், “நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது.

4:11 இப்பொழுது, உன் கைகள் சிந்திய உன் சகோதரனின் இரத்தத்தைத் தன் வாய்திறந்து குடித்த மண்ணை முன்னிட்டு, நீ சபிக்கப்பட்டிருக்கின்றாய்.

4:12 நீ மண்ணில் பயிரிடும் பொழுது அது இனிமேல் உனக்குப் பலன் தராது. மண்ணுலகில் நீ நாடோடியாக அலைந்து திரிவாய்” என்றார்.

Epistle

James 1:9-16

1:9 தாழ்நிலையில் உள்ள சகோதரர் சகோதரிகள் தாங்கள் உயர்வுபெறும்போது மகிழ்ச்சியடைவார்களாக!

1:10 செல்வச் செழிப்பில் இருப்பவர்கள் தாங்கள் தாழ்நிலை அடையும்போதும் மகிழ்ச்சியாய் இருப்பார்களாக! ஏனெனில், செல்வர்கள் புல்வெளிப் பூவைப்போல மறைந்தொழிவார்கள்.

1:11 கதிரவன் எழ, வெயில் ஏறிப் புல் உலர்ந்துபோம். அதன் பூ வதங்கி விழும்; அதன் அழகிய தோற்றமும் அழிந்துவிடும். அவ்வாறே செல்வரும் தம் அலுவல்களில் ஈடுபடும்போதே அழிவுறுவர்.

1:12 சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றிவாகையினை அவர்கள் பெறுவார்கள்.

1:13 சோதனை வரும்போது, ‘இச்சோதனை கடவுளிடமிருந்து வருகிறது’ என்று யாரும் சொல்லக்கூடாது. ஏனெனில், கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை.

1:14 ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர். அது அவர்களைக் கவர்ந்து மயக்கித் தன் வயப்படுத்துகிறது.

1:15 பின்னர் தீய நாட்டம் கருக்கொண்டு பாவத்தைப் பெற்றெடுக்கிறது. பாவம் முழு வளர்ச்சியடைந்து சாவை விளைவிக்கிறது.

1:16 என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, ஏமாந்துபோக வேண்டாம்.

Gospel

Luke 22:24-32

22:24 மேலும், தங்களுக்குள்ளே பெரியவராக எண்ணப்பட வேண்டியவர் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது.

22:25 இயேசு அவர்களிடம், “பிற இனத்தவரின் அரசர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள்; அதிகாரம் காட்டுகின்றவர்கள் நன்மை செய்பவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள்.

22:26 ஆனால், நீங்கள் அப்படிச் செய்யலாகாது. உங்களுள் பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும்.

22:27 யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன்.

22:28 நான் சோதிக்கப்படும்போது என்னோடு இருந்தவர்கள் நீங்களே.

22:29 என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பது போல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

22:30 ஆகவே, என் ஆட்சி வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்; இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள்.

22:31 “சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப்போல் உங்களைப் புடைக்கச் சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான்.

22:32 ஆனால், நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து” என்றார்.