திருவருகைக் காலம்

கிறிஸ்துவின் திருவருகையின் முதல் ஞாயிறு

உரைத்தொகுப்பு 1

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் (சங்கீதம்) 24 அல்லது திருப்பாடல்கள் (சங்கீதம்) 100

திருப்பாடல்கள் (சங்கீதம்) 24

24:1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.

24:2 ஏனெனில், அவரே கடல்கள்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே.

24:3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்?

24:4 கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்; வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர்,

24:5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.

24:6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. (சேலா)

24:7 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.

24:8 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்; இவரே போரில் வல்லவரான ஆண்டவர்.

24:9 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.

24:10 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர். (சேலா)

திருப்பாடல்கள் (சங்கீதம்) 100

100:1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!

100:2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்!

100:3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!

100:4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்!

100:5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.

திருமுகம்

உரோமையருக்கு எழுதிய திருமுகம் (ரோமர்) 13:11-14

13:11 இறுதிக்காலம் இதுவே என அறிந்து கொள்ளுங்கள்; உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததை விட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது.

13:12 இரவு முடியப்போகிறது; பகல் நெருங்கி உள்ளது. ஆகவே, இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக!

13:13 பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்ப்போமாக!

13:14 தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்.

நற்செய்தி

மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 21:1-9

21:1 இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அனுப்பி,

21:2 “நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள்.

21:3 யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், ‘இவை ஆண்டவருக்குத் தேவை’ எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பிவிடுவார்” என்றார்.

21:4-5 “மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்” என்று இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது.

21:6 சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியே செய்தார்கள்.

21:7 அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள்.

21:8 பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர்.

21:9 அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், “தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!” என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்.