Trinity

20th Sunday after Trinity

Text cycle 2

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Isaiah 5:1-7

5:1 என் நண்பரைக்குறித்துக் கவி பாடுவேன்; என் அன்பரின் திராட்சைத் தோட்டத்தைப் பற்றிக் காதல் பாட்டொன்று பாடுவேன்; செழுமை மிக்கதொரு குன்றின்மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது.

5:2 அவர் அதை நன்றாகக், கொத்திக்கிளறிக் கற்களைக் களைந்தெடுத்தார்; நல்ல இனத் திராட்சைச் செடிகளை அதில் நட்டுவைத்தார்; அவற்றைக் காக்கும் பொருட்டுக் கோபுரம் ஒன்றைக் கட்டி வைத்தார்; திராட்சைப் பழம் பிழிய ஆலை ஒன்றை அமைத்தார்; நல்ல திராட்சைக் குலைகள் கிட்டுமென எதிர்பார்த்து காத்திருந்தார்; மாறாக, காட்டு பழங்களையே அது தந்தது.

5:3 இப்பொழுது என் நண்பர் சொல்கிறார்; எருசலேமில் குடியிருப்போரே, யூதாவில் வாழும் மனிதரே, எனக்கும் என் திராட்சைத் தோட்டத்திற்கும் இடையே நீதி வழங்குங்கள்.

5:4 என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யாது நான் விட்டு விட்டதும் இனிச் செய்யக் கூடியதும் ஏதும் உண்டோ? நற்கனிகளைத் தரும் என்று நான் காத்திருக்க, காட்டுப் பழங்களை அது தந்ததென்ன?

5:5 என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யப் போவதை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன், கேளுங்கள்; “நானே அதன் வேலியைப் பிடுங்கி எறிவேன்; அது தீக்கிரையாகும்; அதன் சுற்றுச் சுவரைத் தகர்த்தெறிவேன்; அது மிதியுண்டு போகும்.

5:6 நான் அதைப் பாழாக்கி விடுவேன்; அதன் கிளைகள் நறுக்கப்படுவதில்லை; களையை அகற்ற மண் கொத்தப்படுவதுமில்லை; நெருஞ்சியும், முட்புதர்களுமே அதில் முளைக்கும்; அதன்மீது மழை பொழியாதிருக்க மேகங்களுக்குக் கட்டளையிடுவேன்.”

5:7 படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே; அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று யூதா மக்களே; நீதி விளையுமென்று எதிர்நோக்கியிருந்தார்; ஆனால் விளைந்ததோ இரத்தப்பழி; நேர்மை தழைக்கும் என்று காத்திருந்தார்; ஆனால் தழைத்ததோ முறைப்பாடு.

Epistle

Romans 11:25-32

11:25 சகோதர சகோதரிகளே, நீங்கள் அறிவாளிகள் எனக் கருதாதவாறு மறைபொருள் ஒன்றை உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன். அதாவது, பிற இனத்தார் முழுமையாக இறைவனிடம் வந்து சேரும் வரையில் தான் இஸ்ரயேலில் ஒரு பகுதியினர் மழுங்கிய உள்ளம் கொண்டிருப்பர்.

11:26-27 பின்னர், இஸ்ரயேல் இனம் முழுவதும் மீட்கப்படும்; “சீயோனிலிருந்து அவர் மீட்பராக வருவார்; யாக்கோபில் தீயதனைத்தையும் போக்கிடுவார். நான் அவர்களுடைய பாவங்களை அகற்றிவிடுவேன்; அவர்களுடன் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே” என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா!

11:28 நற்செய்தியை ஏற்றுக் கொள்ளாததால் அவர்கள் கடவுளுக்குப் பகைவர்கள் ஆயினர்; அதுவும் உங்களுக்கு நன்மையாய் அமைந்தது. ஆனால், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாயிருப்பதால் அவர்களுடைய மூதாதையரை முன்னிட்டு அவரது அன்புக்கு உரியவர்கள் ஆனார்கள்.

11:29 ஏனெனில், கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதில்லை.

11:30 ஒரு காலத்தில் நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள்; இப்பொழுது அவர்கள் கீழ்ப்படியாமல் இருப்பதால், நீங்கள் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுக் கொண்டீர்கள்.

11:31 அதுபோல, இக்காலத்தில் நீங்கள் இரக்கத்திற்குரியவர்களாக இருக்கிறீர்கள்; அவர்கள் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்; ஆனால், அவர்களும் விரைவில் இரக்கம் பெற்றுக் கொள்வார்கள்; அதன் பொருட்டே இவ்வாறு நடந்திருக்கிறது.

11:32 ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார்.

Gospel

Matthew 21:28-44

21:28 மேலும் இயேசு, “இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ‘மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றார்.

21:29 அவர் மறுமொழியாக, ‘நான் போக விரும்பவில்லை’ என்றார். ஆனால், பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார்.

21:30 அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, ‘நான் போகிறேன் ஐயா!’ என்றார்; ஆனால், போகவில்லை.

21:31 இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” என்று கேட்டார். அவர்கள் “மூத்தவரே” என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், “வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

21:32 ஏனெனில், யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை” என்றார்.

21:33 “மேலும், ஓர் உவமையைக் கேளுங்கள்: நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக்குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.

21:34 பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்த போது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார்.

21:35 தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள்.

21:36 மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள்.

21:37 தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.

21:38 அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்’ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

21:39 பின்பு, அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.

21:40 எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?” என இயேசு கேட்டார்.

21:41 அவர்கள் அவரிடம், “அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்கு சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறுதோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்” என்றார்கள்.

21:42 இயேசு அவர்களிடம், “‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!’ என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா?

21:43 எனவே, உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

21:44 இந்தக் கல்லின்மேல் விழுகிறவர் நொறுங்கிப்போவார். இது யார் மேல் விழுமோ அவரும் நசுங்கிப் போவார்” என்றார்.