அரசர்கள் - இரண்டாம் நூல் (2 இராஜாக்கள்) 5:1-5 அல்லது அரசர்கள் - இரண்டாம் நூல் (2 இராஜாக்கள்) 5:9-15 அல்லது எசேக்கியேல் 18:1-4
அரசர்கள் - இரண்டாம் நூல் (2 இராஜாக்கள்) 5:1-5
5:1 சிரியா மன்னனின் படைத்தலைவனான நாமான் தம் தலைவனிடம் சிறப்பும் நன்மதிப்பும் பெற்றிருந்தார். ஏனெனில், அவர் மூலமாய் ஆண்டவர் சிரியாவுக்கு வெற்றி அளித்திருந்தார். அவர் வலிமை மிக்க வீரர்; ஆனால், தொழுநோயாளி.
5:2 சிரியா நாட்டினர் ஒருமுறை கொள்ளையடிக்கச் சென்ற பொழுது, இஸ்ரயேலைச் சார்ந்த ஒரு சிறுமியைக் கடத்திக் கொண்டு வந்திருந்தனர். அவள் நாமானின் மனைவிக்குப் பணிவிடை புரிந்து வந்தாள்.
5:3 அவள் தன் தலைவியை நோக்கி, “என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் முன்னிலையில் சென்றாரெனில், அவர் இவரது தொழுநோயைக் குணமாக்குவார்” என்றாள்.
5:4 எனவே, நாமான் தம் தலைவனிடம் சென்று, “இஸ்ரயேல் நாட்டைச் சார்ந்த சிறுமி இன்னின்னவாறு கூறுகின்றாள்” என்று அவனுக்குத் தெரிவித்தார்.
5:5 அப்பொழுது சிரியா மன்னர், “சென்று வாரும். நான் இஸ்ரயேல் அரசனுக்கு மடல் தருகிறேன்” என்றார். எனவே, நாமான் ஏறத்தாழ நானூறு கிலோ வெள்ளியையும், ஆறாயிரம் பொற்காசுகளையும், பத்துப் பட்டாடைகளையும் எடுத்துக்கொண்டு பயணமானார்.
அரசர்கள் - இரண்டாம் நூல் (2 இராஜாக்கள்) 5:9-15
5:9 அவ்வாறே, நாமான் தம் குதிரைகளுடனும் தேருடனும் எலிசா வீட்டு வாயில்முன் வந்து நின்றார்.
5:10 எலிசா, “நீ போய் யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால், உன் உடல் நலம் பெறும்” என்று ஆளனுப்பிச் சொல்லச் சொன்னார்.
5:11 எனவே, நாமான் சினமுற்று வெளியேறினார். அப்பொழுது அவர், “அவர் என்னிடம் வந்து, என் அருகில் நின்று, தம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைக் கூவியழைத்து, தொழுநோய் கண்ட இடத்தின்மேல் தம் கையை அசைத்துக் குணப்படுத்துவார் என்று நான் எண்ணியிருந்தேன்.
5:12 அபானா, பர்பார் என்ற தமஸ்கு நதிகள் இஸ்ரயேலில் உள்ள ஆறுகள் அனைத்தையும்விட மேலானவை அல்லவா? அவற்றில் மூழ்கி நான் நலமடைய முடியாதா?” என்று கூறி ஆத்திரமாய்த் திரும்பிச் செல்லலானார்.
5:13 அப்பொழுது அவருடைய வேலைக்காரர்கள் அவரை அணுகி, அவரிடம், “எம் தந்தையே! இறைவாக்கினர் இதைவிட அரிதான ஒன்றை உமக்குக் கூறியிருந்தால், நீர் அதைச் செய்திருப்பீர் அல்லவா? மாறாக, ‘மூழ்கி எழும்; நலமடைவீர்’ என்று அவர் கூறும்போது அதை நீர் செய்வதற்கென்ன?” என்றனர்.
5:14 எனவே நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறுபிள்ளையின் உடலைப்போல் மாறினது.
5:15 பின்பு, அவர் தம் பரிவாரம் அனைத்துடன் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து, “இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென இப்போது உறுதியாக அறிந்து கொண்டேன். இதோ, உம் அடியான்! எனது அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளும்” என்றார்.
எசேக்கியேல் 18:1-4
18:1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.
18:2 “புளித்த திராட்சைப் பழங்களைப் பெற்றோர் தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்றாம்” என்னும் பழமொழியை இஸ்ரயேல் நாட்டைக் குறித்து நீங்கள் வழங்குவதன் பொருள் என்ன?
18:3 என்மேல் ஆணை! என்கிறார் தலைவராகிய ஆண்டவர். இப்பழமொழி இஸ்ரயேலில் உங்களிடையே வழங்கப்படாது.
18:4 உயிர் அனைத்தும் எனக்கே சொந்தம். பெற்றோரின் உயிர் என்னுடையது; பிள்ளைகளின் உயிரும் என்னுடையதே. பாவம் செய்யும் உயிரே சாகும்.