திரித்துவ காலம்

மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் இருபத்தொன்றாம் ஞாயிறு

உரைத்தொகுப்பு 2

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

எசேக்கியேல் 18:1-4

18:1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.

18:2 “புளித்த திராட்சைப் பழங்களைப் பெற்றோர் தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்றாம்” என்னும் பழமொழியை இஸ்ரயேல் நாட்டைக் குறித்து நீங்கள் வழங்குவதன் பொருள் என்ன?

18:3 என்மேல் ஆணை! என்கிறார் தலைவராகிய ஆண்டவர். இப்பழமொழி இஸ்ரயேலில் உங்களிடையே வழங்கப்படாது.

18:4 உயிர் அனைத்தும் எனக்கே சொந்தம். பெற்றோரின் உயிர் என்னுடையது; பிள்ளைகளின் உயிரும் என்னுடையதே. பாவம் செய்யும் உயிரே சாகும்.

திருமுகம்

யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு (வெளிப்படுத்தல்) 3:7-13

3:7 “பிலதெல்பியாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ‘தூயவரும் உண்மையுள்ளவரும் தாவீதின் திறவுகோலைக் கொண்டிருப்பவரும் எவரும் பூட்ட முடியாதவாறு திறந்து விடுபவரும் எவரும் திறக்க முடியாதவாறு பூட்டிவிடுபவரும்’ கூறுவது இதுவே:

3:8 உன் செயல்களை நான் அறிவேன். இதோ, எவராலும் பூட்ட முடியாத கதவை நான் உனக்குமுன் திறந்து வைத்திருக்கிறேன். சிறிதளவு வலிமைதான் உன்னிடம் இருக்கிறது. இருப்பினும், நீ என் வாக்கைக் கடைப்பிடித்தாய்; என் பெயரை மறுதலிக்கவில்லை.

3:9 சாத்தானின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், தாங்கள் யூதர்கள் எனக் கூறிக் கொள்கிறார்கள். அவர்கள் யூதர்களே அல்ல, பொய்யர்கள். அவர்கள் உன்னிடம் வந்து, உன் காலடியில் விழுந்து பணியச் செய்வேன்; நான் உன்மீது அன்பு செலுத்திவருகிறேன் என்பதையும் அறியச்செய்வேன்.

3:10 மனவுறுதி தரும் என் வாக்கை நீ கடைப்பிடித்ததால், மண்ணுலகில் வாழ்வோரைச் சோதிக்க உலகு அனைத்தின்மீதும் வரவிருக்கும் சோதனைக் காலத்தில் நான் உன்னைக் காப்பாற்றுவேன்.

3:11 இதோ, விரைவில் வருகிறேன். உனக்குரிய மணிமுடியை வேறு யாரும் பறித்துக்கொள்ளாதபடி பார்த்துக் கொள். நீ பெற்றுக்கொண்டதை உறுதியாகப் பற்றிக்கொள்.

3:12 வெற்றி பெறுவோரை என் கடவுளின் கோவிலில் தூணாக நாட்டுவேன். அவர்கள் அதை விட்டு ஒருபொழுதும் நீங்கமாட்டார்கள். என் கடவுளின் பெயரையும் என் கடவுளுடைய நகரின் பெயரையும், அதாவது என் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருகின்ற புதிய எருசலேமின் பெயரையும் என் புதிய பெயரையும் அவர்கள்மீது பொறிப்பேன்.

3:13 கேட்கச் செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.’

நற்செய்தி

லூக்கா நற்செய்தி (லூக்கா) 13:1-9

13:1 அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.

13:2 அவர் அவர்களிடம் மறுமொழியாக, “இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?

13:3 அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.

13:4 சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா?

13:5 அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்” என்றார்.

13:6 மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: “ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை.

13:7 எனவே, அவர் தோட்டத் தொழிலாளரிடம், ‘பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே, இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார்.

13:8 தொழிலாளர் மறுமொழியாக, ‘ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன்.

13:9 அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்’ என்று அவரிடம் கூறினார்.”