திரித்துவ காலம்

மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் இருபத்திரண்டாம் ஞாயிறு

உரைத்தொகுப்பு 1

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

தொடக்க நூல் (ஆதியாகமம்) 50:15-21

50:15 அப்பொழுது, யோசேப்பின் சகோதரர் தங்கள் தந்தை இறந்துவிட்டதைக் கண்டு, “யோசேப்பு நாம் அவருக்குச் செய்த அனைத்துத் தீமைகளையும் கருதி, இப்பொழுது நம்மை வெறுத்து உறுதியாகப் பழி வாங்குவார்” என்று எண்ணினர்.

50:16 எனவே, அவர்கள் யோசேப்புக்கு இவ்வாறு செய்தி அனுப்பினர்: “உம் தந்தை இறப்பதற்குமுன், ‘உன் சகோதரர் உனக்குத் தீங்கிழைத்ததன் மூலம் உண்டான குற்றப்பழியையும், பாவத்தையும் மன்னித்துவிடு என்று யோசேப்புக்குச் சொல்லுங்கள்’ என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்.

50:17 ஆகவே, இப்பொழுது உம்தந்தையின் கடவுளுடைய அடியார்களாகிய எங்களின் குற்றப்பழியை மன்னித்தருளும்.” அவர்கள் இதைத் தம்மிடம் அறிவித்தபோது யோசேப்பு அழுதார்.

50:18 அவர் சகோதரரும் அழுது அவர்முன் தாள்பணிந்து, “நாங்கள் உம் அடிமைகள்” என்றனர்.

50:19 யோசேப்பு அவர்களிடம், “அஞ்சாதீர்கள்; நான் கடவுளுக்கு இணையானவனா?

50:20 நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். ஆனால், கடவுள் அதை இன்று நடப்பது போல், திரளான மக்களை உயிரோடு காக்கும் பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார்.

50:21 ஆகவே, இப்பொழுது அஞ்சவேண்டாம். உங்களையும் உங்கள் குழந்தைகளையும் நான் பேணிக்காப்பேன்” என்றார். இப்படியாக அவர் அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்; அவர்களுடன் இதமாகப் பேசிவந்தார்.

திருமுகம்

பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் (பிலிப்பியர்) 1:6-11

1:6 உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்வார் என உறுதியாய் நம்புகிறேன்.

1:7 நீங்கள் என் இதயத்தில் இடம் பெற்றுவிட்டீர்கள். உங்கள் எல்லாரையும் பற்றி எனக்கு இத்தகைய எண்ணங்கள் எழுவது முறையே. ஏனெனில், நான் சிறையிலிருக்கும் இந்நேரத்திலும் நற்செய்திக்காக வழக்காடி அதை நிலைநாட்டிய காலத்திலும் நான் பெற்ற அருளில் உங்களுக்கும் பங்கு உண்டு.

1:8 கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே பரிவுள்ளத்தோடு உங்கள்மீது எத்துணை ஏக்கமாயிருக்கிறேன் என்பதற்குக் கடவுளே சாட்சி.

1:9-11 மேலும், நீங்கள் அறிவிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுகிறேன். கடவுளின் மாட்சிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நீதியின் செயல்களால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்துவர வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறேன்.

நற்செய்தி

மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 18:21-35

18:21 பின்பு, பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டார்.

18:22 அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

18:23 விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார்.

18:24 அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர்.

18:25 அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்.

18:26 உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்’ என்றான்.

18:27 அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.

18:28 ஆனால், அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு, ‘நீ பட்ட கடனைத் திருப்பித் தா’ எனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான்.

18:29 உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார்.

18:30 ஆனால், அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான்.

18:31 அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள்.

18:32 அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ‘பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன்.

18:33 நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?’ என்று கேட்டார்.

18:34 அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.

18:35 உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.”