Trinitatis

22. søndag efter Trinitatis

Tekstrække 2

Bibeloversættelse

Økumenisk Bibel — Tamilsk katolsk økumenisk bibel

📜
Det Gamle Testamente

Esajas' Bog 49,13-18

49:13 வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்; மண்ணுலகே, களிகூரு; மலைகளே, அக்களித்து ஆர்ப்பரியுங்கள்; ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; சிறுமையுற்ற தம் மக்கள்மீது இரக்கம் காட்டியுள்ளார்.

49:14 சீயோனோ, ‘ஆண்டவர் என்னைக் கைநெகிழ்ந்துவிட்டார்; என் தலைவர் என்னை மறந்து விட்டார்’ என்கிறாள்.

49:15 பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்.

49:16 இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன். உன் சுவர்கள் எப்பொழுதும் என் கண்முன் நிற்கின்றன.

49:17 உன் பிள்ளைகள் விரைந்து வருவர்; உன்னை அழித்துப் பாழாக்கியோரும் உன்னை விட்டுப் போய்விடுவர்.

49:18 உன் கண்களை உயர்த்திச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் உன்னிடம் ஒருங்கே வருகின்றனர்; என் உயிர்மேல் ஆணை! நீ அவர்கள் அனைவரையும் அணிகலன்போல் அணிந்துகொள்வாய்; மணப்பெண் அணிவதுபோல் அணிந்துகொள்வாய், என்கிறார் ஆண்டவர்.

Epistel

Paulus' Brev til Efeserne 4,30-32

4:30 கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார்.

4:31 மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள்.

4:32 ஒருவருக்கொருவர் நன்மைசெய்து பரிவு காட்டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.

Evangelium

Matthæusevangeliet 18,1-14

18:1 அந்நேரத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி, “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று கேட்டார்கள்.

18:2 அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி,

18:3 பின்வருமாறு கூறினார்: “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

18:4 இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்.

18:5 இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.

18:6 “என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வோருடைய கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டித் தொங்கவிட்டு ஆழ்கடலில் அமிழ்த்துவது அவர்களுக்கு நல்லது.

18:7 ஐயோ! பாவத்தில் விழச்செய்யும் உலகுக்குக் கேடு! பாவத்தில் விழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ! அதற்குக் காரணமாய் இருப்போருக்குக் கேடு!

18:8 உங்கள் கையோ காலோ உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதை வெட்டி எறிந்துவிடுங்கள். நீங்கள் இரு கையுடனோ இரு காலுடனோ என்றும் அணையாத நெருப்பில் தள்ளப்படுவதைவிடக் கை ஊனமுற்றோராய் அல்லது கால் ஊனமுற்றோராய் நிலை வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.

18:9 உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள். இரு கண்ணுடையவராய் எரிநரகில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக்கண்ணராய் நிலை வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.

18:10 “இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

18:11 [ஏனெனில் மானிட மகன் நெறிதவறியோரை மீட்கவே வந்தார்.]

18:12 இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா?

18:13 அவர் அதைக் கண்டுபிடித்தால் வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப்பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

18:14 அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.