18:1
அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள்.
18:2
இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி:
18:3
நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
18:4
ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.
18:5
இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்.
18:6
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
18:7
இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
18:8
உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
18:9
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாய் எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
18:10
இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
18:11
மனுஷகுமாரன் கெட்டுப்போனதை ரட்சிக்க வந்தார்.
18:12
உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ?
18:13
அவன் அதைக் கண்டுபிடித்தால், சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுகிறதைப்பார்க்கிலும், அதைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
18:14
இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.