எரேமியா 7:1-11
7:1 ஆண்டவர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு:
7:2 ஆண்டவரின் இல்ல வாயிலில் நின்று நீ அறிவிக்க வேண்டிய வாக்கு இதுவே; ஆண்டவரை வழிபட இவ்வாயில்கள் வழியாகச் செல்லும் யூதாவின் மக்களே! நீங்கள் அனைவரும் கேளுங்கள்.
7:3 இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது: “உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்ப்படுத்துங்கள். நான் இந்த இடத்தில் உங்களைக் குடியிருக்கச் செய்வேன்.
7:4 “இது ஆண்டவரின் கோவில்! ஆண்டவரின் கோவில்! ஆண்டவரின் கோவில்!” என்னும் ஏமாற்றுச் சொற்களை நம்பவேண்டாம்.
7:5 நீங்கள் உங்கள் வழிகளையும் செயல்களையும் முற்றிலும் சீர்ப்படுத்திக் கொண்டால், ஒருவர் ஒருவரோடு முற்றிலும் நேர்மையுடன் நடந்துகொண்டால்,
7:6 அன்னியரையும் அனாதைகளையும் கைம்பெண்களையும் ஒடுக்காதிருந்தால், மாசற்றோரின் இரத்தத்தை இவ்விடத்தில் சிந்தாதிருந்தால், உங்களுக்கே தீங்கு விளைவிக்கும் வேற்றுத் தெய்வ வழிபாட்டை நிறுத்தி விட்டால்,
7:7 இந்த இடத்தில், முன்பே நான் உங்கள் மூதாதையர்க்கு எக்காலத்திற்குமென்று கொடுத்துள்ள இந்த நாட்டில் உங்களைக் குடியிருக்கச் செய்வேன்.
7:8 நீங்களோ, பயனற்ற ஏமாற்றுச் சொற்களை நம்புகிறீர்கள்.
7:9 களவு, கொலை, விபச்சாரம் செய்கிறீர்கள்; பொய்யாணை இடுகிறீர்கள்; பாகாலுக்குத் தூபம் காட்டுகிறீர்கள். நீங்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களை வழிபடுகிறீர்கள்.
7:10 ஆயினும், என் பெயர் விளங்கும் இந்தக் கோவிலுள் வந்து, என்முன் நின்றுகொண்டு, “நாங்கள் பாதுகாப்பாய் உள்ளோம்” என்கிறீர்கள். அருவருப்பான இவற்றைச் செய்யவா இந்தப் பாதுகாப்பு?
7:11 என் பெயர் விளங்கும் இந்தக் கோவில் உங்கள் பார்வையில் கள்வரின் குகையாகிவிட்டதோ? நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்,” என்கிறார் ஆண்டவர்.