Trinity

25th Sunday after Trinity

Text cycle 2

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Job 14:7-15

14:7 மரத்திற்காவது நம்பிக்கையுண்டு; அது தறிக்கப்பட்டால் மீண்டும் துளிர்க்கும்; அதன் குருத்துகள் விடாது துளிர்க்கும்.

14:8 அதன் வேர் மண்ணில் பழமை அடைந்தாலும், அதன் அடிமரம் நிலத்தில் பட்டுப்போனாலும்,

14:9 தண்ணீர் மணம் பட்டதும் அது துளிர்க்கும்; இளஞ்செடிபோல் கிளைகள் விடும்.

14:10 ஆனால், மனிதர் மடிகின்றனர்; மண்ணில் மறைகின்றனர்; உயிர் போனபின் எங்கே அவர்கள்?

14:11 ஏரியில் தண்ணீர் இல்லாது போம்; ஆறும் வறண்டு காய்ந்துபோம்.

14:12 மனிதர் படுப்பர்; எழுந்திருக்கமாட்டார்; வானங்கள் அழியும்வரை அவர்கள் எழுவதில்லை; அவர்கள் துயிலிலிருந்து எழுப்பப்படுவதில்லை.

14:13 ஓ! என்னைப் பாதாளத்தில் ஒளித்து வைக்கமாட்டீரா? உமது சீற்றம் தணியும்வரை மறைத்து வைக்கமாட்டீரா? என்னை நினைக்க ஒருநேரம் குறிக்கமாட்டீரா?

14:14 மனிதர் மாண்டால், மறுபடியும் வாழ்வரா? எனக்கு விடிவு வரும்வரை, என் போராட்ட நாள்களெல்லாம் பொறுத்திருப்பேன்.

14:15 நீர் அழைப்பீர்; உமக்கு நான் பதிலளிப்பேன்; உம் கைவினையாம் என்னைக் காண விழைவீர்.

Epistle

2 Peter 3:8-15 or 1 Corinthians 15:50-57

2 Peter 3:8-15

3:8 அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிடவேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன.

3:9 ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால், அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிருக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார்.

3:10 ஆனால் ஆண்டவருடைய நாள் திருடனைப்போல வரும். வானங்கள் பெருமுழக்கத்துடன் மறைந்தொழியும்; பஞ்சபூதங்கள் வெந்திருகிப் போகும். மண்ணுலகமும் அதன் செயல்களும் தீக்கிரையாகும்.

3:11 இவை யாவும் அழிந்துபோகுமாதலால் நீங்கள் தூய, இறைப்பற்றுள்ள நடத்தையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும்!

3:12 கடவுளின் நாளை எதிர்பார்த்து அவர் வருகையை விரைவுபடுத்த வேண்டும். அந்நாளில் வானங்கள் எரிந்தழிந்து பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும்.

3:13 அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

3:14 ஆகவே, அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழுமுயற்சி செய்யுங்கள்.

3:15 நம் ஆண்டவரின் பொறுமையை மீட்பு எனக் கருதுங்கள். நம் அன்பார்ந்த சகோதரர் பவுலும் தமக்கு அருளப்பட்ட ஞானத்தின்படி இவ்வாறுதான் உங்களுக்கு எழுதியுள்ளார்.

1 Corinthians 15:50-57

15:50 அன்பர்களே, நான் சொல்வது இதுவே; ஊனியல்புடைய மனிதர் இறையாட்சியை உரிமைப் பேறாக அடைய முடியாது. அழிவுக்குரியது அழியாமையை உரிமைப் பேறாக அடைய முடியாது.

15:51 இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன்; நாம் யாவரும் சாகமாட்டோம்; ஆனால், அனைவரும் மாற்றுரு பெறுவோம்.

15:52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்; நாமும் மாற்றுரு பெறுவோம்.

15:53 ஏனெனில், அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்.

15:54 அழிவுக்குரியது அழியாமையையும், சாவுக்குரியது சாகாமையையும் அணிந்து கொள்ளும்போது மறைநூலில் எழுதியுள்ள வாக்கு நிறைவேறும்: “சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது.

15:55 சாவே, உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?”

15:56 பாவமே சாவின் கொடுக்கு. பாவத்துக்கு வலிமை தருவது திருச்சட்டமே.

15:57 ஆகவே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!

Gospel

Luke 17:20-33

17:20 இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர். அவர் மறுமொழியாக, “இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது.

17:21 இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்லமுடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது” என்றார்.

17:22 பின்பு, அவர் சீடர்களை நோக்கிக் கூறியது: “ஒரு காலம் வரும்; அப்போது மானிட மகனுடைய நாள்களில் ஒன்றையாவது காண நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். ஆனால், நீங்கள் காணமாட்டீர்கள்.

17:23 அவர்கள் உங்களிடம், ‘இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே!’ என்பார்கள். ஆனால், நீங்கள் போக வேண்டாம்; அவர்களைப் பின் தொடரவும் வேண்டாம்.

17:24 வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரைக்கும் பளீரென மின்னி ஒளிர்வது போல மானிடமகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார்.

17:25 ஆனால், முதலில் அவர் பல துன்பங்கள் பட்டு இந்தத் தலைமுறையினரால் உதறித் தள்ளப்பட வேண்டும்.

17:26 நோவாவின் காலத்தில் நடந்ததுபோலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும்.

17:27 நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தது.

17:28 அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள், குடித்தார்கள்; வாங்கினார்கள், விற்றார்கள்; நட்டார்கள், கட்டினார்கள்.

17:29 லோத்து சோதோமை விட்டுப்போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன.

17:30 மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.

17:31 “அந்நாளில் வீட்டின் மேல் தளத்தில் இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக் கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம்.

17:32 லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.

17:33 தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக் கொள்வர்.