கிறிஸ்து பிறப்புக் காலம்

கிறிஸ்து பிறப்புத் திருநாளின் இரண்டாம் நாள்

உரைத்தொகுப்பு 1

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

எரேமியா 1:17-19

1:17 நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன்.

1:18 இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன்.

1:19 அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்” என்கிறார் ஆண்டவர்.

திருமுகம்

திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 6:8-14 அல்லது திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 7:54-60

திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 6:8-14

6:8 ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார்.

6:9 அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக்கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவனோடு வாதாடத் தொடங்கினர்.

6:10 ஆனால், அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை.

6:11 பின்பு அவர்கள், “இவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்” என்று கூறச் சிலரைத் தூண்டிவிட்டனர்.

6:12 அவ்வாறே, அவர்கள் மக்களையும் மூப்பர்களையும் மறைநூல் அறிஞர்களையும் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்தார்கள். உடனே அவர்கள் எழுந்து வந்து அவரைப் பிடித்துத் தலைமைச் சங்கத்துக்கு இழுத்துச் சென்றார்கள்;

6:13 மேலும், பொய்ச் சாட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர்கள், “இந்த மனிதன் இத்தூய இடத்தையும் திருச்சட்டத்தையும் எதிர்த்து ஓயாமல் பேசி வருகிறான்” என்று கூறினார்கள்.

6:14 மேலும் அவர்கள், “நசரேயராகிய இயேசு இந்த இடத்தை அழித்துவிடுவார் என்றும், மோசே நமக்குக் கொடுத்திருக்கிற முறைமைகளை மாற்றிவிடுவார் என்றும் இவன் கூறக் கேட்டோம்” என்றார்கள்.

திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 7:54-60

7:54 இவற்றைக் கேட்டவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தார்கள்.

7:55 அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்று நோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு,

7:56 “இதோ, வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்” என்று கூறினார்.

7:57 ஆனால், அவர்கள் தங்கள் செவிகளை அடைத்துக் கொண்டு பெருங் கூச்சலிட்டு ஒருமிக்க அவர்மேல் பாய்ந்தார்கள்.

7:58 நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு போய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள்.

7:59 அவர்கள் ஸ்தேவான்மீது கல்லெறிந்தபோது அவர், “ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று வேண்டிக் கொண்டார்.

7:60 பின்பு முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், “ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்” என்று சொல்லி உயிர்விட்டார்.

நற்செய்தி

மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 23:34-39

23:34 எனவே இதைக் கேளுங்கள். நான் உங்களிடையே இறைவாக்கினரையும் ஞானிகளையும் மறைநூல் அறிஞர்களையும் அனுப்புகிறேன். இவர்களுள் சிலரை நீங்கள் கொல்வீர்கள்; சிலரைச் சிலுவையில் அறைவீர்கள்; சிலரை உங்கள் தொழுகைக் கூடங்களில் சாட்டையால் அடிப்பீர்கள்; நகரங்கள்தோறும் அவர்களைத் துரத்தித் துன்புறுத்துவீர்கள்.

23:35 இவ்வாறு நேர்மையாளரான ஆபேலின் இரத்தம்முதல் திருக்கோவிலுக்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொன்ற பரக்கியாவின் மகன் சக்கரியாவின் இரத்தம்வரை இம்மண்ணில் சிந்தப்பட்ட நேர்மையாளர் அனைவரின் இரத்தப் பழியும் உங்கள்மேல் வந்து சேரும்.

23:36 இத்தலைமுறையினரே இத் தண்டனைகள் அனைத்தையும் அடைவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

23:37 “எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே, உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே. கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன். உனக்கு விருப்பமில்லையே!

23:38 இதோ! உங்கள் இறை இல்லம் கைவிடப்பட்டுப் பாழடையும்.

23:39 எனவே, இதுமுதல், ‘ஆண்டவரின் பெயரால்§ வருபவர் ஆசிபெற்றவர்!’ என நீங்கள் கூறும்வரை என்னைக் காண மாட்டீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.