Easter

2nd Sunday after Easter

Text cycle 2

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Psalm 23

23:1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

23:2 பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.

23:3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;

23:4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.

23:5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.

23:6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் § நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.

Epistle

Acts 2:36-41 or Hebrews 13:20-21

Acts 2:36-41

2:36 ஆகையால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.”

2:37 அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய் பேதுருவையும் மற்ற திருத்தூதர்களையும் பார்த்து, “சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.

2:38 அதற்குப் பேதுரு, அவர்களிடம், “நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள்.

2:39 ஏனென்றால், இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது” என்றார்.

2:40 மேலும், அவர் வேறுபல சான்றுகளை எடுத்துக்கூறி, “நெறிக்கெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார்.

2:41 அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப்பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.

Hebrews 13:20-21

13:20 என்றுமுள்ள உடன்படிக்கையின் இரத்தத்தால், ஆடுகளின் பெரும் ஆயரான நம் ஆண்டவர் இயேசுவை இறந்தோரிடமிருந்து எழுப்பியவர் அமைதியை அருளும் கடவுளே.

13:21 அவர் தம் திருவுளத்தை நீங்கள் நிறைவேற்றும்படி, எல்லா நன்மையும் செய்வதற்கு உங்களை ஆயத்தப்படுத்தி இயேசு கிறிஸ்து வழியாகத் தமக்கு உகந்ததை நம்மில் செய்தருள்வாராக! இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

Gospel

John 10:22-30

10:22 எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது குளிர்காலம்.

10:23 கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்து கொண்டிருந்தார்.

10:24 யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, “இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்” என்று கேட்டார்கள்.

10:25 இயேசு மறுமொழியாக, “நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள் தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன.

10:26 ஆனால், நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில், நீங்கள் என் மந்தையை சேர்ந்தவர்கள் அல்ல.

10:27 என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.

10:28 நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார்.

10:29 அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது.

10:30 நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்” என்றார்.