திருக்காட்சிக் காலம்

கிறிஸ்துவின் திருக்காட்சிப் பெருவிழாவிற்குப் பின்வரும் இரண்டாம் ஞாயிறு

உரைத்தொகுப்பு 2

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

அரசர்கள் - முதல் நூல் (1 இராஜாக்கள்) 8:1 அல்லது அரசர்கள் - முதல் நூல் (1 இராஜாக்கள்) 8:12-13 அல்லது அரசர்கள் - முதல் நூல் (1 இராஜாக்கள்) 8:22-30 அல்லது எரேமியா 17:12-14

அரசர்கள் - முதல் நூல் (1 இராஜாக்கள்) 8:1

8:1 பின்னர், சாலமோன் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைத் தாவீதின் நகர் சீயோனினின்று கொண்டுவர விரும்பினார். அதற்காக அவர் இஸ்ரயேலின் பெரியோரையும் எல்லாக் குலத்தவர்களையும் இஸ்ரயேல் மக்களின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களையும் எருசலேமிற்குத் தம்மிடம் வரும்படி அழைத்தார்.

அரசர்கள் - முதல் நூல் (1 இராஜாக்கள்) 8:12-13

8:12 அப்பொழுது சாலமோன், “ஆண்டவரே! நீர் கரிய மேகத்தில் உறைவதாகக் கூறினீர்.

8:13 நீர் என்றென்றும் தங்கி வாழ உயர் இல்லம் ஒன்றை உமக்காக நான் கட்டியுள்ளேன்” என்றார்.

அரசர்கள் - முதல் நூல் (1 இராஜாக்கள்) 8:22-30

8:22 பின்னர், சாலமோன் ஆண்டவரின் பலிபீடத்தை நோக்கி நின்று கொண்டு, இஸ்ரயேல் சபையார் அனைவர் முன்னிலையில் வானத்திற்கு நேரே தம் கைகளை உயர்த்தி

8:23 அவர் மன்றாடியது: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் உம்மைப் போன்ற வேறு கடவுள் யாரும் இல்லை. உமது முன்னிலையில் முழு உள்ளத்தோடு உமக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் உம்முடைய அடியார்க்கு உமது உடன்படிக்கையின்படி தவறாது பேரன்பு காட்டி வருகிறீர்.

8:24 நீர் உம் அடியானாகிய என் தந்தை தாவீதுக்கு உரைத்ததை நிறைவேற்றினீர். அன்று உம் வாயால் உரைத்ததை இன்று கையால் செய்து முடித்தீர்.

8:25 இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! நீர் உம் அடியானாகிய என் தந்தை தாவீதை நோக்கி, “நீ என்னை மறவாமல் நடந்து கொண்டதுபோல் உன் பிள்ளைகள் என்னை மறவாது தக்க நெறியில் நடப்பார்களேயாகில், இஸ்ரயேலின் அரியணையில் வீற்றிருக்க அவர்களுள் ஒருவன் இல்லாமல் போகமாட்டான்’ என்று சொன்னதை நிறைவேற்றும்!

8:26 இஸ்ரயேலின் கடவுளே! உம் அடியானாகிய என் தந்தை தாவீதுக்கு நீர் சொன்ன உமது வார்த்தை நிலை பெறுவதாக!

8:27 கடவுள் உண்மையில் இந்த மண்ணுலகில் தங்கியிருப்பாரா? வானமும் வான மண்டலங்களும் உம்மைக் கொள்ள இயலாதிருக்க நான் கட்டியுள்ள இக்கோவில் எப்படி உம்மைக் கொள்ளும்?

8:28 என் கடவுளாகிய ஆண்டவரே! உம் அடியான் செய்கிற வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் கேட்டருளும்; உம் அடியான் இன்று உம் முன்னிலையில் எழுப்பும் கூக்குரலுக்கும் செய்யும் வேண்டுதலுக்கும் செவிசாய்த்தருளும்!

8:29 ‘என் பெயர் இவ்விடத்தில் விளங்கும்’ என்று இக்கோவிலைப்பற்றி நீர் சொல்லியிருக்கிறீர்! இவ்விடத்தில் உம் அடியான் செய்யும் வேண்டுதலைக் கேட்டருள்வதற்காக, இரவும் பகலும் உமது கண்கள் இதனை நோக்கி இருப்பனவாக!

8:30 உம் அடியானின் விண்ணப்பத்திற்கும் இவ்விடத்தை நோக்கிச் செய்கிற உம் மக்கள் இஸ்ரயேலர் வேண்டுதலுக்கும் செவிசாய்ப்பீராக! உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து கேட்டு அருள்வீராக! கேட்டு மன்னிப்பு அருள்வீராக!

எரேமியா 17:12-14

17:12 “நம் திருத்தூயகம் தொடக்கத்திலிருந்தே உயர்ந்த இடத்தில் அமைந்த, மாட்சிமிகு அரியணையாய் உள்ளது.”

17:13 ஆண்டவரே! இஸ்ரயேலின் நம்பிக்கையே! உம்மைப் புறக்கணித்தோர் யாவரும் வெட்கமுறுவர்; உம்மைவிட்டு அகன்றோர் தரையில் எழுதப்பட்டோர் ஆவர்; ஏனெனில், அவர்கள் வாழ்வளிக்கும் நீரூற்றாகிய ஆண்டவரைப் புறக்கணித்தார்கள்.

17:14 ஆண்டவரே, என்னை நலமாக்கும்; நானும் நலமடைவேன். என்னை விடுவியும்; நானும் விடுதலை அடைவேன்; ஏனெனில், நீரே என் புகழ்ச்சிக்குரியவர்.

திருமுகம்

யோவான் எழுதிய முதல் திருமுகம் (1 யோவான்) 2:28-29 அல்லது யோவான் எழுதிய முதல் திருமுகம் (1 யோவான்) 3:1-3

யோவான் எழுதிய முதல் திருமுகம் (1 யோவான்) 2:28-29

2:28 ஆகவே, பிள்ளைகளே, அவர் தோன்றும்போது நாம் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கவும் அவருடைய வருகையின்போது வெட்கி விலகாதிருக்கவும் அவரோடு இணைந்து வாழுங்கள்.

2:29 அவர் நேர்மையாளரென நீங்கள் அறிந்துகொண்டால், நேர்மையாகச் செயல்படுவோர் அனைவரும் அவரிடமிருந்து பிறந்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

யோவான் எழுதிய முதல் திருமுகம் (1 யோவான்) 3:1-3

3:1 நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்து கொள்ளவில்லை.

3:2 என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால், அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்; ஏனெனில், அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.

3:3 அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பதுபோல் தம்மையே தூயவராக்க வேண்டும்.

நற்செய்தி

யோவான் நற்செய்தி (யோவான்) 4:5-26

4:5 அவர் சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது.

4:6 அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல்.

4:7-8 அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார். இயேசு அவரிடம், “குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்” என்று கேட்டார்.

4:9 அச் சமாரியப் பெண் அவரிடம், “நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?” என்று கேட்டார். ஏனெனில், யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை.

4:10 இயேசு அவரைப் பார்த்து, “கடவுளுடைய கொடை எது என்பதையும் ‘குடிக்கத் தண்ணீர் கொடும்’ எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்றார்.

4:11 அவர் இயேசுவிடம், “ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்?

4:12 எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம்” என்றார்.

4:13 இயேசு அவரைப் பார்த்து, “இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும்.

4:14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்” என்றார்.

4:15 அப்பெண் அவரை நோக்கி, “ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத்தேவையும் இருக்காது” என்றார்.

4:16 இயேசு அவரிடம், “நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக் கொண்டு வாரும்” என்று கூறினார்.

4:17 அப்பெண் அவரைப் பார்த்து, “எனக்குக் கணவர் இல்லையே” என்றார். இயேசு அவரிடம், “‘எனக்குக் கணவர் இல்லை’ என நீர் சொல்வது சரியே.

4:18 உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே, நீர் கூறியது உண்மையே” என்றார்.

4:19 அப்பெண் அவரிடம், “ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன்.

4:20 எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால், நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே” என்றார்.

4:21 இயேசு அவரிடம், “அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்.

4:22 யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால், நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது.

4:23 காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார்.

4:24 கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்” என்றார்.

4:25 அப்பெண் அவரிடம், “கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்” என்றார்.

4:26 இயேசு அவரிடம், “உம்மோடு பேசும் நானே அவர்” என்றார்.