Trinitatis

2. søndag efter Trinitatis

Tekstrække 2

Bibeloversættelse

Økumenisk Bibel — Tamilsk katolsk økumenisk bibel

📜
Det Gamle Testamente

Jeremias' Bog 15,10 eller Jeremias' Bog 15,15-21

Jeremias' Bog 15,10

15:10 நாடெங்கும் சண்டை சச்சரவுக்குக் காரணமான என்னைப் பெற்றெடுத்த என் தாயே, எனக்கு ஐயோ கேடு; நான் கடன் கொடுக்கவும் இல்லை; கடன் வாங்கியதுமில்லை. எனினும் எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள்.

Jeremias' Bog 15,15-21

15:15 ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியும்; நீர் என்னை அறிவீர்; என்னை நினைவுகூரும்; எனக்கு உதவியருளும்; என்னைத் துன்புறுத்துவோரை என் பொருட்டுப் பழிவாங்கும்; நீர் பொறுமையுள்ளவர்; என்னைத் தள்ளிவிடாதேயும்; உம்பொருட்டு நான் வசைமொழிகளுக்கு ஆளாகிறேன் என்பதை நினைவில் கொள்ளும்.

15:16 நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன்; அவற்றை உட்கொண்டேன்; உன் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன; என் உள்ளத்திற்கு உவகை அளித்தன. ஏனெனில், படைகளின் ஆண்டவரே, உம் பெயரே எனக்கு வழங்கலாயிற்று.

15:17 களியாட்டக் கூட்டங்களில் அமர்ந்து நான் மகிழ்ச்சி கொண்டாடவில்லை. உம் கை என்மேல் இருந்ததால் நான் தனியனாய் இருந்தேன். சினத்தால் நீர் என்னை நிரப்பியிருந்தீர்.

15:18 எனக்கு ஏன் தீராத வேதனை? குணமாகாக் கொடிய காயம்? நீர் எனக்குக் கானல் நீரென, ஏமாற்றும் ஓடையென ஆகிவிட்டீரோ!

15:19 எனவே, ஆண்டவர் கூறுவது இதுவே: “நீ திரும்பி வந்தால் நான் உன்னை முன்னைய நிலைக்குக் கொண்டு வருவேன். என்முன் வந்து நிற்பாய்; பயனில நீக்கிப் பயனுள பேசின், நீ என் இறைவாக்கினனாக இருப்பாய். அவர்கள் உன்னிடம் திரும்பி வருவார்கள்; நீ அவர்களிடம் திரும்ப வேண்டாம்.

15:20 நான் உன்னை அவர்கள்முன் வலிமை வாய்ந்த வெண்கலச் சுவராக்குவேன்; அவர்கள் உனக்கு எதிராய்ப் போராடுவார்கள்; ஆனால், உன்மேல் வெற்றி கொள்ள மாட்டார்கள்; ஏனெனில் உன்னை விடுவிக்கவும் காக்கவும் நான் உன்னோடு இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.

15:21 தீயோரின் கையினின்று நான் உன்னைக் காப்பேன்; முரடரின் பிடியினின்று உன்னை மீட்பேன்.”

Epistel

Johannes' Åbenbaring 3,14-22

3:14 “இலவோதிக்கேயாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ‘ஆமென் எனப்படுபவரும் நம்பிக்கைக்குரிய, உண்மையான சாட்சியும் கடவுளது படைப்பின் தொடக்கமும் ஆனவர் கூறுவது இதுவே:

3:15 உன் செயல்களை நான் அறிவேன். நீ குளிர்ச்சியாகவும் இல்லை, சூடாகவும் இல்லை. குளிர்ச்சியாகவோ சூடாகவோ இருந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும்.

3:16 இவ்வாறு, நீ குளிர்ச்சியாகவோ சூடாகவோ இல்லாமல் வெதுவெதுப்பாய் இருப்பதால் என் வாயிலிருந்து உன்னைக் கக்கிவிடுவேன்.

3:17 “எனக்குச் செல்வம் உண்டு, வளமை உண்டு, ஒரு குறையும் இல்லை” என நீ சொல்லிக்கொள்ளுகிறாய். ஆனால், நீ இழிந்த, இரங்கத்தக்க, வறிய, பார்வையற்ற, ஆடையற்ற நிலையில் இருக்கிறாய் என்பது உனக்குத் தெரியவில்லை.

3:18 ஆகவே, நீ செல்வம் பெறும்பொருட்டு புடம்போட்ட பொன்னையும், ஆடையின்றி வெட்கி நிற்கும் உன் நிலையைப் பிறர் காணாதபடி அணிந்துகொள்ள வெண்ணாடையையும், நீ பார்வை பெறும்பொருட்டு உன் கண்களில் தடவிக்கொள்ள மருந்தையும் என்னிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுமாறு உனக்கு அறிவுரை வழங்குகிறேன்.

3:19 நான் யார் மீது அன்பு செலுத்துகிறேனோ அவர்களைக் கடிந்து தண்டித்துத் திருத்துகிறேன். ஆகவே, நீ ஆர்வம் கொண்டு மனம் மாறு.

3:20 இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.

3:21 நான் வெற்றி பெற்று என் தந்தையின் அரியணையில் அவரோடு வீற்றிருப்பது போல, வெற்றி பெறும் எவருக்குமே எனது அரியணையில் என்னோடு வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன்.

3:22 கேட்கச் செவி உடையோர், திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.’

Evangelium

Lukasevangeliet 14,25-35

14:25 பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது:

14:26 “என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது.

14:27 தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது.

14:28 “உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா?

14:29 இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக,

14:30 ‘இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால், முடிக்க இயலவில்லை’ என்பார்களே!

14:31 “வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா?

14:32 எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா?

14:33 அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.

14:34 “உப்பு நல்லது; ஆனால், அது உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்?

14:35 அது நிலத்துக்கோ எருக்குழிக்கோ பயனற்றது. அது வெளியே கொட்டப்படும். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்”