Lent

2nd Sunday in Lent

Text cycle 1

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Psalm 42:2-6

42:2 என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்?

42:3 இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று; ‛உன் கடவுள் எங்கே?’ என்று என்னிடம் தீயோர் கேட்கின்றனர்.

42:4 மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே! ஆர்ப்பரிப்பும் நன்றிப்பாடல்களும் முழங்க விழாக்கூட்டத்தில் நடந்தேனே! இவற்றையெல்லாம் நான் நினைக்கும்போது, என் உள்ளம் வெகுவாய் வெதும்புகின்றது.

42:5 என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? § கடவுளையே நம்பியிரு; என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்.

42:6 என் நெஞ்சம் மிகவும் தளர்ந்துள்ளது; ஆகவே யோர்தான் நிலப்பகுதியிலும், எர்மோன், மீசார் மலைப்பகுதிகளிலும் உம்மை நான் நினைத்துக் கொண்டேன்.

Epistle

1 Thessalonians 4:1-7

4:1 சகோதர சகோதரிகளே! நீங்கள் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடம் கற்றுக் கொண்டீர்கள்; அப்படியே வாழ்ந்தும் வருகிறீர்கள். இதில் இன்னும் முன்னேற வேண்டுமென ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் உங்களிடம் இறுதியாகக் கேட்டுக் கொள்கிறோம்.

4:2 ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நீங்கள் அறிவீர்கள்.

4:3 நீங்கள் தூயோராவதே கடவுளுடைய திருவுளம்; பரத்தைமையை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

4:4 உங்களில் ஒவ்வொருவரும் தம் மனைவியைத் தூயவராகக் கருதி, மதிப்புடன் நடத்த அறிந்திருக்க வேண்டும்.

4:5 கடவுளை அறியாத பிற இனத்தாரைப் போன்று நீங்கள் கட்டுக்கடங்காப் பாலுணர்வுக்கு இடம் கொடுக்கலாகாது.

4:6 இதில் எவரும் தவறிழைத்துத் தம் சகோதரரை வஞ்சிக்கக் கூடாது. ஏனெனில், இத்தகைய செயல்கள் அனைத்தையும் ஆண்டவரே தண்டிப்பார். இதை நாங்கள் முன்னமே உங்களிடம் எடுத்துரைத்திருக்கிறோம்; எச்சரித்தும் இருக்கிறோம்.

4:7 கடவுள் நம்மை ஒழுக்கக்கேட்டிற்கு அல்ல, தூய வாழ்வுக்கே அழைத்தார்.

Gospel

Matthew 15:21-28

15:21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.

15:22 அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறினார்.

15:23 ஆனால், இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்” என வேண்டினர்.

15:24 அவரோ மறுமொழியாக, “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்றார்.

15:25 ஆனால், அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, “ஐயா, எனக்கு உதவியருளும்” என்றார்.

15:26 அவர் மறுமொழியாக, “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார்.

15:27 உடனே அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும், தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என்றார்.

15:28 இயேசு மறுமொழியாக, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.