திருவருகைக் காலம்

கிறிஸ்துவின் திருவருகையின் இரண்டாம் ஞாயிறு

உரைத்தொகுப்பு 1

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

எசாயா (ஏசாயா) 11:1-10

11:1 ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனிதரும்.

11:2 ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு — இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.

11:3 அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார். கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்; காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்;

11:4 நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்; நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்; வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்; உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார்.

11:5 நேர்மை அவருக்கு அரைக்கச்சை; உண்மை அவருக்கு இடைக்கச்சை.

11:6 அந்நாளில், ஒநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்; அக்குட்டியோடு சிறுத்தைப் புலி படுத்துக் கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்; பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும்.

11:7 பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்; அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும்; சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும்;

11:8 பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்; பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும்.

11:9 என் திருமுலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை; கேடு விளைவிப்பார் யாருமில்லை; ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.

11:10 அந்நாளில், மக்களினங்களுக்குச் சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப் பிறஇனத்தார் தேடி வருவார்கள்; அவர் இளைப்பாறும் இடம் மாட்சி நிறைந்ததாக இருக்கும்.

திருமுகம்

உரோமையருக்கு எழுதிய திருமுகம் (ரோமர்) 15:4-7

15:4 முற்காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் நமக்கு அறிவுரையாகவே எழுதப்பட்டன. மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது.

15:5 கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கேற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக!

15:6 இவ்வாறு, நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை ஒருவாய்ப்படப் போற்றிப் புகழ்வீர்கள்.

15:7 ஆகையால், கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள். என் கருத்து இதுவே.

நற்செய்தி

லூக்கா நற்செய்தி (லூக்கா) 21:25-36

21:25 “மேலும் கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள்.

21:26 உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும்.

21:27 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள்.

21:28 இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில், உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.”

21:29 இயேசு அவர்களுக்கு மேலும் ஓர் உவமை சொன்னார்: “அத்தி மரத்தையும் வேறு எந்த மரத்தையும் பாருங்கள்.

21:30 அவை தளிர்விடும் போது அதைப் பார்க்கும் நீங்களே கோடைக்காலம் நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள்.

21:31 அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும் போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

21:32 அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

21:33 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால், என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா.”

21:34-35 மேலும் இயேசு, “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும்.

21:36 ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்” என்றார்.