Lent

3rd Sunday in Lent

Text cycle 1

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Deuteronomy 18:9-15

18:9 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டுக்குள் போனபின், அந்த வேற்றினத்தாரின் அருவருப்பான செயல்களைக் கற்றுக் கொள்ளாதே.

18:10 தன் புதல்வனை அல்லது புதல்வியைத் தீ மிதிக்கச் செய்கிறவனும், குறி சொல்கிறவனும், நாள் பார்க்கிறவனும், சகுனங்களை நம்புகிறவனும், சூனியக்காரனும்,

18:11 மந்திரவாதியும், ஏவிவிடுகிறவனும், மாயவித்தைக்காரனும், இறந்தவர்களிடம் குறிகேட்கிறவனும் உங்களிடையே இருத்தலாகாது.

18:12 ஏனெனில், இவற்றையெல்லாம் செய்கிறவன் ஆண்டவருக்கு அருவருப்பானவன். இப்படிப்பட்ட அருவருப்பான செயல்களின் நிமித்தம், உன் கடவுளாகிய ஆண்டவர் உன் முன்னிலையினின்று அவனைத் துரத்திவிடுவார்.

18:13 கடவுளாகிய ஆண்டவருக்கு நீ முற்றிலும் உண்மையாய் இரு.

18:14 ஏனெனில், நீ துரத்திவிடவிருக்கும் இந்த வேற்றினத்தார் குறிசொல்லுகிறவர்களுக்கும், நாள் பார்க்கிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள். அவ்வாறு செயல்பட உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை அனுமதிக்கவில்லை.

18:15 கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப்போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு.

Epistle

Ephesians 5:1-9

5:1 ஆகவே நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள்.

5:2 கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.

5:3 பரத்தைமை, அனைத்து ஒழுக்கக்கேடுகள், பேராசை ஆகியவற்றின் பெயர் கூட உங்களிடையே சொல்லப்படலாகாது. இதுவே இறைமக்களுக்கு ஏற்ற நடத்தை.

5:4 அவ்வாறே, வெட்கங்கெட்ட செயல், மடத்தனமான பேச்சு, பகடி பண்ணுதல் ஆகியவை தகாதவை; நன்றி சொல்லுதலே தகும்.

5:5 ஏனெனில், பரத்தைமையில் ஈடுபடுவோர், ஒழுக்கக் கேடாக நடப்போர், சிலை வழிபாடாகிய பேராசை கொண்டோர் போன்ற எவரும் கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசில் உரிமைப் பேறு அடையார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

5:6 வீண் வார்த்தைகளால் உங்களை யாரும் ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில், மேற்கூறிய செயல்களால்தான் கீழ்ப்படியாத மக்கள் மீது கடவுளின் சினம் வருகின்றது.

5:7 எனவே, அவர்களோடு நீங்கள் எதிலும் பங்கு கொள்ள வேண்டாம்.

5:8 ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே, ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.

5:9 ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது.

Gospel

Luke 11:14-28

11:14 ஒரு நாள் இயேசு பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டினார். பேய் வெளியேறவே, பேச்சற்ற அவர் பேசினார். கூட்டத்தினர் வியந்து நின்றனர்.

11:15 அவர்களுள் சிலர், “பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றனர்.

11:16 வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்.

11:17 இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களிடம் கூறியது: “தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும்.

11:18 சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே.

11:19 நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள்.

11:20 நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா!

11:21 வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும்.

11:22 அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக் கலங்களையும் பறித்துக் கொண்டு, கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார்.

11:23 என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்.”

11:24 “ஒருவரைவிட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம்தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், ‘நான் விட்டுவந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்’ எனச் சொல்லும்.

11:25 திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகு படுத்தப்பட்டிருப்பதைக் காணும்.

11:26 மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும்.”

11:27 அவர் இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்று குரலெழுப்பிக் கூறினார்.

11:28 அவரோ, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்றார்.