தவக்காலம்

தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு

உரைத்தொகுப்பு 2

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

விடுதலைப் பயணம் (யாத்திராகமம்) 32:7-10 அல்லது விடுதலைப் பயணம் (யாத்திராகமம்) 32:30-32

விடுதலைப் பயணம் (யாத்திராகமம்) 32:7-10

32:7 அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, “இங்கிருந்து இறங்கிப்போ. நீ எகிப்திலிருந்து நடத்திவந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக்கொண்டனர்.

32:8 நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்கென ஒரு கன்றுக் குட்டியை வார்த்துக் கொண்டார்கள். அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, ‘இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே’ என்று கூறிக் கொள்கிறார்கள்” என்றார்.

32:9 மேலும், ஆண்டவர் மோசேயிடம், “இம் மக்களை எனக்குத் தெரியும்; வணங்காக்கழுத்துள்ள மக்கள் அவர்கள்.

32:10 இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன். உன்னையோ பேரினமாக்குவேன்” என்றார்.

விடுதலைப் பயணம் (யாத்திராகமம்) 32:30-32

32:30 மறுநாள் மோசே மக்களை நோக்கி, “நீங்கள் பெரும்பாவம் செய்துவிட்டீர்கள்; இப்போது நான் மலைமேலேறி ஆண்டவரிடம் செல்லப்போகிறேன். அங்கே ஒரு வேளை உங்கள் பாவத்திற்காக நான் கழுவாய் செய்யஇயலும்” என்றார்.

32:31 அவ்வாறே மோசே ஆண்டவரிடம் திரும்பிவந்து, “ஐயோ, இம்மக்கள் தங்களுக்காகப் பொன்னால் தெய்வங்களை உருவாக்கிப் பெரும்பாவம் செய்துவிட்டார்கள்.

32:32 இப்போதும், நீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளும். இல்லையேல், நீர் எழுதிய உம் நூலிலிருந்து என் பெயரை நீக்கிவிடும்” என்றார்.

திருமுகம்

யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு (வெளிப்படுத்தல்) 2:1-7

2:1 “எபேசில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ‘தமது வலக்கையில் ஏழு விண்மீன்களை உறுதியாய்ப் பிடித்துக்கொண்டு, ஏழுபொன் விளக்குத்தண்டுகள் நடுவில் நடப்பவர் கூறுவது இதுவே:

2:2 உன் செயல்களையும் கடின உழைப்பையும் மனவுறுதியையும் நான் அறிவேன். தீயவர்களை உன்னால் சகித்துக் கொள்ள முடியாது என்பதும், திருத்தூதர்களாய் இல்லாதிருந்தும் தங்களை அவ்வாறு திருத்தூதர்கள் என அழைத்துக் கொள்ளுகின்றவர்களை நீ சோதித்துப் பார்த்து, அவர்கள் பொய்யர்கள் என்று கண்டறிந்தாய் என்பதும் எனக்குத் தெரியும்.

2:3 நீ மனவுறுதி கொண்டுள்ளாய்; என் பெயரின்பொருட்டு எத்தனையோ துன்பங்களை நீ தாங்கிக் கொண்டுள்ளாய்; ஆயினும் சோர்வு அடையவில்லை என்பதும் எனக்குத் தெரியும்.

2:4 ஆனால், உன்னிடம் நான் காணும் குறை யாதெனில், முதலில் உன்னிடம் விளங்கிய அன்பு இப்போது இல்லை.

2:5 ஆகையால், நீ எந்நிலையிலிருந்து தவறி விழுந்து விட்டாய் என்பதை நினைத்துப்பார்; மனம்மாறு; முதலில் நீ செய்து வந்த செயல்களை இப்பொழுதும் செய். நீ மனம் மாறத் தவறினால், நான் உன்னிடம் வந்து உனது விளக்குத்தண்டை அது இருக்கும் இடத்திலிருந்து அகற்றிவிடுவேன்.

2:6 இருப்பினும், உன்னிடம் நல்லது ஒன்றும் உண்டு. நான் வெறுக்கிற நிக்கொலாயரின் செயல்களை நீயும் வெறுக்கிறாய்.

2:7 கேட்கச்செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும். கடவுளின் தோட்டத்தில் உள்ள வாழ்வு தரும் மரத்தினுடைய கனியை வெற்றி பெறுவோருக்கு உண்ணக் கொடுப்பேன்.’

நற்செய்தி

யோவான் நற்செய்தி (யோவான்) 8:42-51

8:42 இயேசு அவர்களிடம் கூறியது: “கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்.

8:43 நான் சொல்வதற்குச் செவி சாய்க்க உங்களால் இயலவில்லை. எனவேதான் நான் சொல்வதை நீங்கள் கண்டுணர்வதில்லை.

8:44 சாத்தானே உங்களுக்குத் தந்தை. உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்கள் விருப்பம். தொடக்க முதல் அவன் ஒரு கொலையாளி. அவனிடம் உண்மை இல்லாததால் அவன் உண்மையைச் சார்ந்து நிற்கவில்லை. அவன் பொய் பேசும்போதும் அது அவனுக்கு இயல்பாக இருக்கிறது. ஏனெனில் ,அவன் பொய்யன், பொய்ம்மையின் பிறப்பிடம்.

8:45 நான் உண்மையைக் கூறுவதால் நீங்கள் என்னை நம்புவதில்லை.

8:46 என்னிடம் பாவம் உண்டு என்று உங்களுள் யாராவது என்மேல் குற்றம் சுமத்த முடியுமா? நான் உங்களிடம் உண்மையைக் கூறியும் நீங்கள் ஏன் என்னை நம்புவதில்லை?

8:47 கடவுளைச் சார்ந்தவர் கடவுளிள் சொல்லுக்குச் செவிசாய்க்கிறார்; நீங்கள் கடவுளைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் அவர் சொல்லுக்குச் செவி சாய்ப்பதில்லை.”

8:48 யூதர்கள் இயேசுவைப் பார்த்து,” நீ சமாரியன், பேய் பிடித்தவன் என நாங்கள் சொல்வது சரிதானே?” என்றார்கள்.

8:49 அதற்கு இயேசு, “நான் பேய் பிடித்தவன் அல்ல; என் தந்தைக்கு மதிப்பளிப்பவன். ஆனால், நீங்கள் என்னை அவமதிக்கிறீர்கள்.

8:50 நான் எனக்குப் பெருமை தேடுவதில்லை. அதை எனக்குத் தேடித்தருபவர் ஒருவர் இருக்கிறார். அவரே தீர்ப்பளிப்பவர்.

8:51 என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.