Advent

3rd Sunday of Advent

Text cycle 2

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Isaiah 40:1-8

40:1 “ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்” என்கிறார் உங்கள் கடவுள்.

40:2 எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.

40:3 குரலொலி ஒன்று முழங்குகின்றது; பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்.

40:4 பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.

40:5 ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்.

40:6 “உரக்கக் கூறு” என்றது ஒரு குரல்; “எதை நான் உரக்கக் கூற வேண்டும்?” என்றேன். “மானிடர் அனைவரும் புல்லே ஆவர்; அவர்களின் மேன்மை வயல்வெளிப் பூவே!

40:7 ஆண்டவரின் ஆவி இறங்கி வரவே, புல் உலர்ந்துபோம்; பூ வதங்கிவிழும்; உண்மையில் மானிடர் புல்லே ஆவர்!

40:8 புல் உலர்ந்துபோம்; பூ வதங்கி விழும்; நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.

Epistle

2 Corinthians 4:5-10

4:5 நாங்கள் எங்களைப் பற்றி அல்ல, இயேசு கிறிஸ்துவைப் பற்றியே அறிவிக்கிறோம்; அவரே ஆண்டவர் எனப்பறைசாற்றி வருகிறோம். நாங்கள் இயேசுவின் பொருட்டு வந்த உங்கள் பணியாளர்களே.

4:6 “இருளிலிருந்து ஒளி தோன்றுக!” என்று சொன்ன கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார். அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே.

4:7 இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை, அது கடவுளுக்குகே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது.

4:8 நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை;

4:9 துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை.

4:10 இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம்.

Gospel

Luke 1:67-80

1:67 பிள்ளையின் தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைத்த இறைவாக்கு:

1:68 “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில், அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.

1:69-70 தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;

1:71 நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார்.

1:72-73 அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.

1:74-75 இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.

1:76-77 குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில், பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்.

1:78-79 இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.”

1:80 குழந்தையாயிருந்த யோவான் வளர்ந்து மனவலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.