உயிர்ப்புக் காலம்

கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்குப் பின்வரும் நான்காம் ஞாயிறு

உரைத்தொகுப்பு 1

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

எசேக்கியேல் 36:26-28

36:26 நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன்.

36:27 என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைப் கடைப்பிடிக்கவும் என் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன்.

36:28 நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள். அப்போது என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.

திருமுகம்

யாக்கோபு எழுதிய திருமுகம் (யாக்கோபு) 1:17-21 அல்லது திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 9:1-18

யாக்கோபு எழுதிய திருமுகம் (யாக்கோபு) 1:17-21

1:17 நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல.

1:18 தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார்.

1:19 என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இதைத் தெரிந்து கொள்ளுங்கள்; ஒவ்வொருவரும் கேட்பதில் வேகமும் பேசுவதிலும் சினங்கொள்வதிலும் தாமதமும் காட்டவேண்டும்.

1:20 ஏனெனில், மனிதரின் சினம் கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறத் தடையாயிருக்கிறது.

1:21 எனவே, எல்லா வகையான அழுக்கையும், உங்களிடம் மிகுந்துள்ள தீமையையும் அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது.

திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 9:1-18

9:1 இதற்கிடையில் சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் திருத்தூதர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். தலைமைக் குருவை அணுகி,

9:2 இந்தப் புதிய நெறியைச் சார்ந்த ஆண், பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்கு இழுத்துக்கொண்டு வரத் தமஸ்கு நகரிலுள்ள தொழுகைக் கூடங்களுக்குக் கடிதங்களைக் கேட்டு வாங்கினார்.

9:3 இவ்வாறு, அவர் புறப்பட்டுச்சென்று தமஸ்குவை நெருங்கியபோது திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது.

9:4 அவர் தரையில் விழ, “சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார்.

9:5 அதற்கு அவர், “ஆண்டவரே நீர் யார்?” எனக்கேட்டார். ஆண்டவர், “நீ துன்புறுத்தும் இயேசு நானே.

9:6 நீ எழுந்து நகருக்குள் செல்; நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்” என்றார்.

9:7 அவரோடு பயணம் செய்தோர் இக்குரலைக் கேட்டனர். ஆனால், ஒருவரையும் காணாமல் வாயடைத்து நின்றனர்.

9:8 சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே, அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள்.

9:9 அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை.

9:10 தமஸ்குவில் அனனியா என்னும் பெயருடைய சீடர் ஒருவர் இருந்தார். ஆண்டவர் அவருக்குத் தோன்றி, “அனனியா” என அழைக்க, அவர், “ஆண்டவரே, இதோ அடியேன்” என்றார்.

9:11 அப்போது ஆண்டவர் அவரிடம், “நீ எழுந்து நேர்த் தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப்போது இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்.

9:12 அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார்” என்று கூறினார்.

9:13 அதற்கு அனனியா மறுமொழியாக, “ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.

9:14 உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான்” என்றார்.

9:15 அதற்கு ஆண்டவர் அவரிடம், “நீ செல். அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார்.

9:16 என் பெயரின்பொருட்டு அவர் எத்துணை துன்புறவேண்டும் என்பதை நான் அவருக்கு எடுத்துக்காட்டுவேன்” என்றார்.

9:17 அனனியா அங்கிருந்து போய் அந்த வீட்டுக்குள் சென்று கைகளை அவர் மீது வைத்து, “சகோதரர் சவுலே, நீர் வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு நீர் மீண்டும் பார்வை அடையவும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார்” என்றார்.

9:18 உடனே அவருடைய கண்களிலிருந்து செதிள்கள் போன்றவை விழவே அவர் மீண்டும் பார்வையடைந்தார். பார்வையடைந்ததும் அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார்.

நற்செய்தி

யோவான் நற்செய்தி (யோவான்) 16:5-15

16:5 இப்போது என்னை அனுப்பியவரிடம் போகிறேன்; ஆனால், உங்களுள் எவரும் ‘நீர் எங்கே போகிறீர்?’ என்று என்னிடம் கேட்காமலேயே

16:6 நான் சொன்னவற்றைக் குறித்து துயரத்தில் மூழ்கியுள்ளீர்கள்.

16:7 நான் உங்களிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்.

16:8 அவர் வந்து பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார்.

16:9 பாவம் பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் ,என்னிடம் அவர்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லை.

16:10 நீதி பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில், நான் தந்தையிடம் செல்கிறேன்; நீங்களும் இனி என்னைக் காண மாட்டீர்கள்.

16:11 தீர்ப்பு பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில், இவ்வுலகின் தலைவன் தண்டனை பெற்றுவிட்டான்.

16:12 “நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால், அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.

16:13 உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.

16:14 அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.

16:15 தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ‘அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்’ என்றேன்.