உயிர்ப்புக் காலம்

கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்குப் பின்வரும் நான்காம் ஞாயிறு

உரைத்தொகுப்பு 2

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் (சங்கீதம்) 124

124:1 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில் – இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக!

124:2 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,

124:3 அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.

124:4 அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்;

124:5 கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும்.

124:6 ஆண்டவர் போற்றி! போற்றி! எதிரிகளின் பற்களுக்கு அவர் நம்மை இரையாக்கவில்லை.

124:7 வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம்; கண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம்.

124:8 ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே!

திருமுகம்

திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 9:1-18 அல்லது கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் (2 கொரிந்தியர்) 5:14-21

திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 9:1-18

9:1 இதற்கிடையில் சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் திருத்தூதர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். தலைமைக் குருவை அணுகி,

9:2 இந்தப் புதிய நெறியைச் சார்ந்த ஆண், பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்கு இழுத்துக்கொண்டு வரத் தமஸ்கு நகரிலுள்ள தொழுகைக் கூடங்களுக்குக் கடிதங்களைக் கேட்டு வாங்கினார்.

9:3 இவ்வாறு, அவர் புறப்பட்டுச்சென்று தமஸ்குவை நெருங்கியபோது திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது.

9:4 அவர் தரையில் விழ, “சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார்.

9:5 அதற்கு அவர், “ஆண்டவரே நீர் யார்?” எனக்கேட்டார். ஆண்டவர், “நீ துன்புறுத்தும் இயேசு நானே.

9:6 நீ எழுந்து நகருக்குள் செல்; நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்” என்றார்.

9:7 அவரோடு பயணம் செய்தோர் இக்குரலைக் கேட்டனர். ஆனால், ஒருவரையும் காணாமல் வாயடைத்து நின்றனர்.

9:8 சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே, அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள்.

9:9 அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை.

9:10 தமஸ்குவில் அனனியா என்னும் பெயருடைய சீடர் ஒருவர் இருந்தார். ஆண்டவர் அவருக்குத் தோன்றி, “அனனியா” என அழைக்க, அவர், “ஆண்டவரே, இதோ அடியேன்” என்றார்.

9:11 அப்போது ஆண்டவர் அவரிடம், “நீ எழுந்து நேர்த் தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப்போது இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்.

9:12 அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார்” என்று கூறினார்.

9:13 அதற்கு அனனியா மறுமொழியாக, “ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.

9:14 உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான்” என்றார்.

9:15 அதற்கு ஆண்டவர் அவரிடம், “நீ செல். அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார்.

9:16 என் பெயரின்பொருட்டு அவர் எத்துணை துன்புறவேண்டும் என்பதை நான் அவருக்கு எடுத்துக்காட்டுவேன்” என்றார்.

9:17 அனனியா அங்கிருந்து போய் அந்த வீட்டுக்குள் சென்று கைகளை அவர் மீது வைத்து, “சகோதரர் சவுலே, நீர் வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு நீர் மீண்டும் பார்வை அடையவும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார்” என்றார்.

9:18 உடனே அவருடைய கண்களிலிருந்து செதிள்கள் போன்றவை விழவே அவர் மீண்டும் பார்வையடைந்தார். பார்வையடைந்ததும் அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார்.

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் (2 கொரிந்தியர்) 5:14-21

5:14 கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது. ஏனெனில், ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார். அனைவரும் அவரோடு இறந்தனர். இது நமக்குத் தெரியும்.

5:15 வாழ்வோர் இனி தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழவேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார்.

5:16 ஆகவே, இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை; முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம். ஆனால், இப்போது அவ்வாறு செய்வதில்லை.

5:17 எனவே, ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!

5:18 இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்; ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார்.

5:19 உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார்.

5:20 எனவே, நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே, கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்.

5:21 நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.

நற்செய்தி

யோவான் நற்செய்தி (யோவான்) 8:28-36

8:28 இயேசு அவர்களிடம், “நீங்கள் மானிட மகனை உயர்த்திய பின்பு, ‘இருக்கிறவர் நானே’; நானாக எதையும் செய்வதில்லை; மாறாகத் தந்தை கற்றுத் தந்ததையே நான் எடுத்துரைக்கிறேன் என்பதை அறிந்து கொள்வீர்கள்.

8:29 என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை. நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்” என்றார்.

8:30 அவர் இவற்றைச் சொன்னபோது பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

8:31 இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, “என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்;

8:32 உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” என்றார்.

8:33 யூதர்கள் அவரைப் பார்த்து,” ‘உங்களுக்கு விடுதலை கிடைக்கும்’ என நீர் எப்படிச் சொல்லலாம்? நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் ஆயிற்றே!” என்றார்கள்.

8:34 அதற்கு இயேசு, “பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

8:35 வீட்டில் அடிமைக்கு நிலையான இடம் இல்லை; மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு.

8:36 மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள்.