Trinitatis

4. søndag efter Trinitatis

Tekstrække 1

Bibeloversættelse

Økumenisk Bibel — Tamilsk katolsk økumenisk bibel

📜
Det Gamle Testamente

Anden Samuelsbog 11,26-27 eller Anden Samuelsbog 12,1-7

Anden Samuelsbog 11,26-27

11:26 உரியானின் மனைவி தன் கணவன் இறந்துவிட்டதைக் கேள்வியுற்று அவருக்காகப் புலம்பி அழுதாள்.

11:27 துக்ககாலம் முடிந்ததும் தாவீது ஆளனுப்பி அவளைத் தம் வீட்டிற்குக் கொண்டு வந்தார். அவள் அவருக்கு மனைவியாகி ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். தாவீது செய்த இச்செயல் ஆண்டவரின் பார்வையில் தீயதாக இருந்தது.

Anden Samuelsbog 12,1-7

12:1 ஆண்டவர் நாத்தானைத் தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் அவரிடம் வந்து, பின்வருமாறு கூறினார்: “ஒரு நகரில் இரு மனிதர் இருந்தனர்; ஒருவன் செல்வன். மற்றவனோ ஏழை.

12:2 செல்வனிடம் ஆடு, மாடுகள் ஏராளமாய் இருந்தன.

12:3 ஏழையிடம் ஒரு ஆட்டுக்குட்டி தவிர வேறு ஒன்றுமே இல்லை. அவன் அதை விலைக்கு வாங்கியிருந்தான். அது அவனோடும் அவன் குழந்தைகளோடும் இருந்து வளர்ந்து பெரியதாகியது. அவனது உணவை உண்டு, அவனது கிண்ணத்திலிருந்து நீர்குடித்து, அவனது மடியில் உறங்கி, அவனுக்கு ஒரு மகளைப் போலவே அது இருந்தது.

12:4 வழிப்போக்கன் ஒருவன் செல்வனிடம் வந்தான். தன்னிடம் வந்த வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்ய தன் ஆடுமாடுகளினின்று ஒன்றை எடுப்பதை விட்டு, அந்த ஏழையின் ஆட்டுக்குட்டியை எடுத்து வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்தான்”.

12:5 உடனே தாவீது அம்மனிதன் மேல் சீற்றம்கொண்டு “ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும்,

12:6 இரக்கமின்றி அவன் இதைச் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும்” என்று நாத்தானிடம் கூறினார்.

12:7 அப்போது நாத்தான் தாவீதிடம், “நீயே அம்மனிதன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘நான் இஸ்ரயேலின் அரசனாய் உன்னைத் திருப்பொழிவு செய்தேன்; நான் உன்னைச் சவுலின் கையினின்று விடுவித்தேன்.

Epistel

Paulus' Brev til Romerne 8,18-23

8:18 இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன்.

8:19 இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது.

8:20 ஏனெனில், படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது; தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை; அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று; எனினும், அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை.

8:21 அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது.

8:22 இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம்.

8:23 படைப்பு மட்டும் அல்ல; முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்.

Evangelium

Lukasevangeliet 6,36-42

6:36 உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.

6:37 “பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.

6:38 கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.”

6:39 மேலும், இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது: “பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா?

6:40 சீடர் குருவைவிட மேலானவர் அல்ல. ஆனால், தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போலிருப்பர்.

6:41 “நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்?

6:42 உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்து கொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், ‘உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்க முடியும்? வெளி வேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.