2 Samuel 11:26-27 or 2 Samuel 12:1-7
2 Samuel 11:26-27
11:26 உரியானின் மனைவி தன் கணவன் இறந்துவிட்டதைக் கேள்வியுற்று அவருக்காகப் புலம்பி அழுதாள்.
11:27 துக்ககாலம் முடிந்ததும் தாவீது ஆளனுப்பி அவளைத் தம் வீட்டிற்குக் கொண்டு வந்தார். அவள் அவருக்கு மனைவியாகி ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். தாவீது செய்த இச்செயல் ஆண்டவரின் பார்வையில் தீயதாக இருந்தது.
2 Samuel 12:1-7
12:1 ஆண்டவர் நாத்தானைத் தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் அவரிடம் வந்து, பின்வருமாறு கூறினார்: “ஒரு நகரில் இரு மனிதர் இருந்தனர்; ஒருவன் செல்வன். மற்றவனோ ஏழை.
12:2 செல்வனிடம் ஆடு, மாடுகள் ஏராளமாய் இருந்தன.
12:3 ஏழையிடம் ஒரு ஆட்டுக்குட்டி தவிர வேறு ஒன்றுமே இல்லை. அவன் அதை விலைக்கு வாங்கியிருந்தான். அது அவனோடும் அவன் குழந்தைகளோடும் இருந்து வளர்ந்து பெரியதாகியது. அவனது உணவை உண்டு, அவனது கிண்ணத்திலிருந்து நீர்குடித்து, அவனது மடியில் உறங்கி, அவனுக்கு ஒரு மகளைப் போலவே அது இருந்தது.
12:4 வழிப்போக்கன் ஒருவன் செல்வனிடம் வந்தான். தன்னிடம் வந்த வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்ய தன் ஆடுமாடுகளினின்று ஒன்றை எடுப்பதை விட்டு, அந்த ஏழையின் ஆட்டுக்குட்டியை எடுத்து வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்தான்”.
12:5 உடனே தாவீது அம்மனிதன் மேல் சீற்றம்கொண்டு “ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும்,
12:6 இரக்கமின்றி அவன் இதைச் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும்” என்று நாத்தானிடம் கூறினார்.
12:7 அப்போது நாத்தான் தாவீதிடம், “நீயே அம்மனிதன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘நான் இஸ்ரயேலின் அரசனாய் உன்னைத் திருப்பொழிவு செய்தேன்; நான் உன்னைச் சவுலின் கையினின்று விடுவித்தேன்.