திரித்துவ காலம்

மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் நான்காம் ஞாயிறு

உரைத்தொகுப்பு 2

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

இணைச் சட்டம் (உபாகமம்) 24:17-22

24:17 அந்நியர் அல்லது அநாதைக்கு உரிய நீதியைப் புரட்டாதே. கைம்பெண்ணின் ஆடையை அடகாக வாங்காதே.

24:18 எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்ததையும், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை விடுவித்ததையும் நீ நினைவில் இருத்தி, இவற்றைச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

24:19 உன் வயலில், விளைச்சல் அறுவடை செய்யும்போது, அரிக்கட்டினை மறந்து வயலிலே விட்டு வந்தால், அதை எடுக்கத் திரும்பிப் போகாதே. அதை அந்நியருக்கும் அநாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு. அப்போது நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார்.

24:20 நீ உன் ஒலிவ மரத்தை அடித்து உதிர்க்கும்போது, உதிராததைப் பறிக்காதே. அதை அந்நியருக்கும் அநாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு.

24:21 நீ உன் திராட்சைத் தோட்டக் கனிகளைச் சேகரித்தபின், பொறுக்காமல் கிடப்பதை எடுக்கச் செல்லாதே. அதை அந்நியருக்கும் அநாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு.

24:22 எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்ததை நினைவிலிருத்தி, இவற்றைச் செய்யும்படி, நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

திருமுகம்

உரோமையருக்கு எழுதிய திருமுகம் (ரோமர்) 14:7-13

14:7 நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை; தமக்கென்று இறப்பதுமில்லை.

14:8 வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம்.

14:9 ஏனெனில், இறந்தோர்மீதும் வாழ்வோர்மீதும் ஆட்சிசெலுத்தவே கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார்.

14:10 அப்படியிருக்க, நீங்கள் ஏன் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் குற்றம் காண்கிறீர்கள்? ஏன் அவர்களை இழிவாகக் கருதுகிறீர்கள்? நாம் அனைவருமே கடவுளின் நடுவர் இருக்கை முன் நிறுத்தப்படுவோம் அல்லவா?

14:11 ஏனெனில், “ஆண்டவர் சொல்கிறார்; நான் என் மேல் ஆணையிட்டுள்ளேன்; முழங்கால் அனைத்தும் எனக்கு முன் மண்டியிடும். நாவு அனைத்தும் என்னைப் போற்றும்” என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!

14:12 ஆகவே, நம்முள் ஒவ்வொருவரும் தம்மைக் குறித்தே கடவுளுக்குக் கணக்குக் கொடுப்பர்.

14:13 ஆகையால், இனி ஒருவர் மற்றவரிடம் குற்றம் காணாதிருப்போம். மேலும், சகோதரர் சகோதரிகளுக்குத் தடைக்கல்லாகவோ இடையூறாகவோ இருப்பதில்லை எனத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

நற்செய்தி

மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 5:43-48

5:43 “‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக’, ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.

5:44 ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.”

5:45 “இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.

5:46 உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா?

5:47 நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?

5:48 ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.”