திருவருகைக் காலம்

கிறிஸ்துவின் திருவருகையின் நான்காம் ஞாயிறு

உரைத்தொகுப்பு 1

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

எசாயா (ஏசாயா) 52:7-10

52:7 நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும் நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, ‘உன் கடவுள் அரசாளுகின்றார்’ என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!

52:8 இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்; அவர்கள் அக்களித்து ஒருங்கே ஆரவாரம் செய்கின்றனர்; ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர்.

52:9 எருசலேமின் பாழ் இடங்களே, ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார்.

52:10 பிறஇனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்; மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.

திருமுகம்

பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் (பிலிப்பியர்) 4:4-7

4:4 ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்.

4:5 கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார்.

4:6 எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால், நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள்.

4:7 அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.

நற்செய்தி

யோவான் நற்செய்தி (யோவான்) 1:19-28

1:19 எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, “நீர் யார்?” என்று கேட்டபோது அவர், “நான் மெசியா அல்ல” என்று அறிவித்தார்.

1:20 இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.

1:21 அப்போது, “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்று அவர்கள் கேட்க, அவர், “நானல்ல” என்றார் “நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டபோதும், அவர், “இல்லை” என்று மறுமொழி கூறினார்.

1:22 அவர்கள் அவரிடம், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?” என்று கேட்டார்கள்.

1:23 அதற்கு அவர், “‘ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது’ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே” என்றார்.

1:24 பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள்

1:25 அவரிடம், “நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?” என்று கேட்டார்கள்.

1:26 யோவான் அவர்களிடம், “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்;

1:27 அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” என்றார்.

1:28 இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.