திருவருகைக் காலம்

கிறிஸ்துவின் திருவருகையின் நான்காம் ஞாயிறு

உரைத்தொகுப்பு 2

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

எசாயா (ஏசாயா) 12

12:1 அந்நாளில் நீ இவ்வாறு சொல்வாய்: ‟ஆண்வடரே, நான் உமக்கு நன்றி சொல்வேன்; நீர் என்மேல் சினமடைந்திருந்தீர்; இப்பொழுதோ, உம் சினம் தணிந்து விட்டது; நீர் எனக்கு ஆறுதலும் அளித்துள்ளீர்.

12:2 இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.”

12:3 மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள்.

12:4 அந்நாளில் நீங்கள் சொல்வதாவது: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர்செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள்.

12:5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக.

12:6 சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரிந்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.

திருமுகம்

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் (2 கொரிந்தியர்) 1:18-22

1:18 நான் ஒரே நேரத்தில் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் உங்களிடம் பேசுவதில்லை. கடவுள் உண்மையுள்ளவராயிருப்பது போல் நான் சொல்வதும் உண்மையே.

1:19 நானும் சில்வானும் திமொத்தேயுவும் உங்களிடையே இருந்தபோது நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் ‘ஆம்’ என உண்மையையே பேசுபவர்.

1:20 அவர் சொல்லும் ‘ஆம்’ வழியாக, கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுகின்றன. அதனால்தான் நாம் கடவுளைப் போற்றிப்புகழும்போது அவர் வழியாக ‘ஆமென்’ எனச் சொல்லுகிறோம்.

1:21 கடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார்; இவ்வாறு கிறிஸ்துவோடு நமக்கு இருக்கும் உறவை அவர் உறுதிப்படுத்துகிறார். அவரே நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.

1:22 அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையைப் பதித்தார்.

நற்செய்தி

யோவான் நற்செய்தி (யோவான்) 3:25-36

3:25 ஒரு நாள் யோவானின் சீடர் சிலருக்கும் யூதர் ஒருவருக்கும் இடையே தூய்மைச் சடங்குபற்றி விவாதம் எழுந்தது.

3:26 அவர்கள் யோவானிடம் போய், “ரபி, யோர்தான் ஆற்றின் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே! நீரும் அவரைக் குறித்துச் சான்று பகர்ந்தீரே! இப்போது அவரும் திருமுழுக்குக் கொடுக்கிறார். எல்லாரும் அவரிடம் செல்கின்றனர்” என்றார்கள்.

3:27 யோவான் அவர்களைப் பார்த்து, “விண்ணிலிருந்து அருளப்படாவிட்டால் எவரும் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது.

3:28 ‘நான் மெசியா அல்ல; மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பபப்பட்டவன்’ என்று நான் கூறியதற்கு நீங்களே சாட்சிகள்.

3:29 மணமகள் மணமகனுக்கே உரியவர். மணமகனின் தோழரோ அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்கிறார்; அதில் அவர் பெருமகிழ்ச்சி அடைகிறார். என் மகிழ்ச்சியும் இது போன்றது. இம்மகிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது.

3:30 அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்” என்றார்.

3:31 மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர். மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர், அனைவருக்கும் மேலானவர்.

3:32 தாம் கண்டதையும் கேட்டதையும்பற்றியே அவர் சான்று பகர்கிறார். எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை.

3:33 அவர் தரும் சான்றை ஏற்றுக் கொள்பவர் கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார்.

3:34 கடவுளால் அனுப்பப் பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார். கடவுள் அவருக்குத் தம் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிக் கொடுக்கிறார்.

3:35 தந்தை மகன் மேல் அன்பு கூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார்.

3:36 மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்