உயிர்ப்புக் காலம்

கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்குப் பின்வரும் ஐந்தாம் ஞாயிறு

உரைத்தொகுப்பு 1

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

தொடக்க நூல் (ஆதியாகமம்) 32:25-32 அல்லது எரேமியா 29:11-13

தொடக்க நூல் (ஆதியாகமம்) 32:25-32

32:25 யாக்கோபை வெற்றி கொள்ள முடியாதென்று கண்ட அந்த ஆடவர் அவரது தொடைச்சந்தைத் தொட்டார். யாக்கோபு அவரோடு மற்போரிடுகையில் தொடைச் சந்து இடம் விலகியது.

32:26 அப்பொழுது ஆடவர் “என்னைப் போகவிடு; பொழுது புலரப்போகிறது” என, யாக்கோபு, “நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்” என்று மறுமொழி சொன்னார்.

32:27 ஆடவர், “உன் பெயர் என்ன?” என,

32:28 அவர்: “நான் யாக்கோபு” என்றார். அப்பொழுது அவர், “உன்பெயர் இனி யாக்கோபு எனப்படாது, ‘இஸ்ரயேல்’ எனப்படும். ஏனெனில், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்” என்றார்.

32:29 யாக்கோபு அவரை நோக்கி “உம் பெயரைச் சொல்லும்” என்றார். அவர் “என் பெயரை நீ கேட்பதேன்?” என்று, அந்த இடத்திலேயே அவருக்கு ஆசி வழங்கினார்.

32:30 அப்பொழுது யாக்கோபு, “நான் கடவுளின் முகத்தை நேரில் கண்டும் உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்று சொல்லி, அந்த இடத்திற்குப் ‘பெனியேல்’ என்று பெயரிட்டார்.

32:31 அவர் பெனியேலுக்கு அப்பால் சென்றவுடன் கதிரவன் தோன்றினான். தொடை விலகியதால் அவரும் நொண்டி நொண்டி நடந்தார்.

32:32 அதன் பொருட்டு, இஸ்ரயேலர் இந்நாள்வரை தொடைச் சந்துச் சதைநாரை உண்பதில்லை. ஏனென்றால், அந்த ஆடவர் யாக்கோபின் தொடைச் சந்துச் சதைநாரைத் தொட்டார்.

எரேமியா 29:11-13

29:11 ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர்.

29:12 நீங்கள் என்னிடம் வந்து கூக்குரலிட்டு மன்றாடுவீர்கள்! அப்பொழுது நான் உங்களுக்குச் செவி கொடுப்பேன்.

29:13 நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; உங்கள் முழு இதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள்.

திருமுகம்

யாக்கோபு எழுதிய திருமுகம் (யாக்கோபு) 1:22-25 அல்லது திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 6:1-4

யாக்கோபு எழுதிய திருமுகம் (யாக்கோபு) 1:22-25

1:22 இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்.

1:23-24 ஏனென்றால் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடவாதோர், கண்ணாடியிலே தம் முகத்தைப் பார்த்துவிட்டுச் சென்று உடனே தாம் எவ்வாறு இருந்தார் என்பதை மறந்து விடும் ஒரு மனிதருக்கு ஒப்பாவர்.

1:25 ஆனால், நிறைவான விடுதலையளிக்கக் கூடிய சட்டத்தைக் கூர்ந்து கவனித்து அதைத் தொடர்ந்து கற்போர் தாம் கேட்பதை மறந்துவிடுவதில்லை; அவர்கள் அதற்கேற்ற செயல்களைச் செய்வார்கள்; தம் செயல்களால் பேறு பெற்றவர் ஆவார்கள்.

திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 6:1-4

6:1 அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர்.

6:2 எனவே, பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, “நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல.

6:3 ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம்.

6:4 நாங்களோ இறை வேண்டலிலும், இறை வார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்” என்று கூறினர்.

நற்செய்தி

யோவான் நற்செய்தி (யோவான்) 16:23-28

16:23 அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள். நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

16:24 இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள்; பெற்றுக் கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும்.

16:25 “நான் உங்களிடம் உருவகமாகவே பேசிவந்துள்ளேன். ஆனால், காலம் வருகிறது. அப்போது உருவகங்கள் வாயிலாய்ப் பேசாமல், தந்தையைப்பற்றி வெளிப்படையாய் எடுத்துரைப்பேன்.

16:26 அந்நாளில் நீங்கள் என் பெயரால் வேண்டுவீர்கள். அப்போது ‘உங்களுக்காகத் தந்தையிடம் கேட்கிறேன்’ என நான் சொல்லமாட்டேன்.

16:27 ஏனெனில், தந்தையே உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார். நீங்கள் என்மீது அன்புகொண்டு, நான் கடவுளிடமிருந்து வந்தேன் என்று நம்புவதால்தான் தந்தையும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளார்.

16:28 நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்.”