எசாயா (ஏசாயா) 44:1-8
44:1 என் ஊழியன் யாக்கோபே, நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலே, இப்பொழுது செவிகொடு.
44:2 உன்னைப் படைத்தவரும், கருப்பையில் உன்னை உருவாக்கியவரும், உனக்கு உதவி செய்பவருமாகிய ஆண்டவர் கூறுவதைக் கேள்; என் ஊழியன் யாக்கோபே, நான் தேர்ந்துகொண்ட ‘எசுரூன்’ அஞ்சாதே!
44:3 ஏனெனில், தாகமுற்ற நிலத்தில் நீரை ஊற்றுவேன்; வறண்ட தரையில் நீரோடைகள் ஓடச் செய்வேன்; உன் வழிமரபினர் மீது என் ஆவியைப் பொழிவேன்; உன் வழித்தோன்றல்களுக்கு நான் ஆசி வழங்குவேன்;
44:4 அவர்கள் நீரோடை அருகிலுள்ள புல் போலும் நாணல்கள் போலும் செழித்து வளருவர்.
44:5 ஒருவன் ‘நான் ஆண்டவருக்கு உரியவன்’ என்பான்; மற்றொருவன் யாக்கோபின் பெயரைச் சூட்டிக்கொள்வான்; வேறொருவன் ‘ஆண்டவருக்குச் சொந்தம்’ என்று தன் கையில் எழுதி, ‘இஸ்ரயேல்’ என்று பெயரிட்டுக் கொள்வான்.
44:6 இஸ்ரயேலின் அரசரும் அதன் மீட்பரும், படைகளின் ஆண்டவருமான ஆண்டவர் கூறுவது இதுவே: தொடக்கமும் நானே; முடிவும் நானே; என்னையன்றி வேறு கடவுள் இல்லை.
44:7 எனக்கு நிகர் யார்? அவன் உரத்த குரலில் அறிவிக்கட்டும். என்றுமுள மக்களை நான் ஏற்படுத்தியதிலிருந்து நடந்தவற்றை முறைப்படுத்திக் கூறட்டும். இனி நடக்கவிருப்பன பற்றியும், நிகழப்போவனபற்றியும் முன்னுரைக்கட்டும்.
44:8 நீங்கள் கலங்காதீர்கள், அஞ்சாதீர்கள்; முன்பிருந்தே நான் உரைக்கவில்லையா? அறிவிக்கவில்லையா? நீங்களே என் சாட்சிகள்; என்னையன்றி வேறு கடவுள் உண்டோ? நான் அறியாத கற்பாறை வேறு உண்டோ?