Isaiah 6:1-8
6:1 உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்; அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது.
6:2 அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்; ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன; ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்; மற்ற இரண்டால் பறந்தனர்.
6:3 அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து: “படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது” என்று உரத்த குரலில் கூறிக் கொண்டிருந்தார்.
6:4 கூறியவரின் குரல் ஒலியால் வாயில் நிலைகளின் அடித்தளங்கள் அசைந்தன; கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது.
6:5 அப்பொழுது நான்: “ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே” என்றேன்.
6:6 அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப் பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக் கொண்டு என்னை நோக்கிப் பறந்து வந்தார்.
6:7 அதனால் என் வாயைத் தொட்டு, “இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது,” என்றார்.
6:8 மேலும் “யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?” என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, “இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்” என்றேன்.